எதிர்ப்பு கிளம்பும் என்பதால் புதிய கல்விக்கொள்கை மொழி பெயர்ப்பு தமிழில் இல்லை: மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை: புதிய கல்விக் கொள்கையை மொழிபெயர்ப்பு செய்து தமிழில் வெளியிடாத மத்திய அரசுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய கல்விக் கொள்கையை, முதலில், இந்தி, ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே வெளியிட்டனர். இப்போது, குஜராத்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட 17 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருக்கின்றனர். நேபாளி மொழிபெயர்ப்பும் வெளியாகி இருக்கின்றது. ஆனால், தமிழில் வெளியிடவில்லை. காரணம், அந்தக் கல்விக் கொள்கையின் உள்ளடக்கம், தமிழர்களுக்குத் தெரியக்கூடாது.

தெரிந்தால் எதிர்ப்புகள்  கிளம்பும். அந்த எதிர்ப்பு இந்தியா முழுமையும் பரவும் என்ற நோக்கத்துடன், திட்டமிட்டு தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை. தமிழ் மொழியின் சிறப்பு, பெருமை என மேடைகளில் முழங்குகின்ற நரேந்திர மோடி அரசின் உள்நோக்கம், வெளிப்பட்டு விட்டது.  இந்தியாவில் ஏழரைக் கோடி மக்கள் பேசுகின்ற தமிழ் மொழியை, கால வரையறை வகுக்க முடியாத செம்மொழியாம் தமிழைப் புறக்கணித்த மோடி தலைமையிலான பாஜ அரசின் போக்கிற்கு, மதிமுக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: