ஓசூர் அருகே மாநில எல்லையில் பாறை அளவு தடிமனாக பெய்த ஆலங்கட்டி மழை

ஓசூர்: ஓசூர் பகுதியில் நேற்று மாலை பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டது. மாநில எல்லை பகுதியில் பாறை அளவுக்கு ஆலங்கட்டி  விழுந்ததால் மக்கள் திகைப்படைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,  கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம்  பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்தது. நேற்றும் ஒரு சில இடங்களில் மழை  பெய்தது. குறிப்பாக ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை வெளுத்து  வாங்கியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.

ஒரு சில   இடங்களில் சுமார் 5 அடி வரை தண்ணீர் தேங்கியது. நகரின் முக்கிய இணைப்பு  சாலைகளான ரயில் நிலைய சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, ராமநாயகன் ஏரிக்கரை  உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குட்டை போல் தேங்கி நின்றது. இதனால், வாகன  ஓட்டிகள் மற்றும் நடந்து சென்றோர் கடும் அவதிக்குள்ளாகினர். வேலை முடிந்து  வீடு திரும்பிய தொழிலாளர்கள் மழையில் முழுக்க நனைந்தவாறு சென்றனர்.

ஓசூர் பகுதியில் நேற்று மாலை மழை பெய்த  சமயத்தில் அருகில் உள்ள கர்நாடக மாநிலம் கோலார் பகுதியிலும் பலத்த மழை  கொட்டியது. சீனிவாசபுரம் கிராமத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. பாறாங்கல்  அளவிற்கு ஆலங்கட்டிகள்  சாலையில் விழுந்து தெறித்தது. இதை பார்த்து அப்பகுதியினர் திகைப்படைந்தனர்.

Related Stories: