தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகளில் 80% நிரம்பிவிட்டதாக அரசு இணையதளத்தில் தகவல்

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகளில் 80% நிரம்பிவிட்டதாக அரசு இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக இல்லை என்று அரசின் stopcoronatn.gov.in. இணையதளத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக 6,367 படுக்கைகளில் 1,626 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐ.சி.யு., வெண்டிலேட்டருடன் கூடிய படுக்கைகளும் பெரும்பாலும் நிரம்பிவிட்டன. சென்னையில் நாள்தோறும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் மருத்துவமனைகள் வேகமாக நிரம்புகின்றன. சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் 27 மருத்துவமனைகள் முழுவதுமாக நிரம்பிவிட்டன. நிரம்பிய 27 மருத்துவமனைகளிலும் கூடுதலாக 624 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரையில் தினசரி கொரோனா பாதிப்பு என்பது இன்றைய தினம் 14 ஆயிரத்தை நெருங்கி இருப்பதாகவே தகவல்கள் கிடைக்கின்றன. சென்னையை பொறுத்தவரை நேற்றைய தினம் இந்த பாதிப்பு என்பது 3,842 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்றைய தினம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா நோயாளிகள் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனைகளுக்கு சென்றால் அங்கு இடமில்லை என திருப்பி அனுப்புகின்ற நிலை இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அரசு தரப்பில் போதிய படுக்கை வசதிகள் இருப்பதாக தொடர்ந்து கூறி வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்பாக்கம் மருத்துவமனை, ஓமாந்தூரார் அரசு மருத்துவமனை, கிண்டியிலுள்ள கொரோனா மருத்துவமனை என 4 பெரிய மருத்துவமனைகள் இருக்கின்றன. அந்த மருத்துவமனைகளை பொறுத்தவரை இடம் இருப்பதாகவே அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரத்தில் கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் கவனிப்பு மையங்களும் அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. கவனிப்பு மையங்களுக்கு செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். அங்கு தேவையான அளவுக்கு அடிப்படை வசதிகள் இல்லாததே இதற்கு காரணமாக உள்ளது. அதேபோல பொதுமக்கள் எளிதாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு செல்வது தான் தற்போது சிக்கலாக உள்ளது. இந்த தனியார் மருத்துவமனைகளில் இடம் கிடைப்பது என்பது சிரமத்திற்குரிய ஒன்றாக இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னையை பொறுத்தவரை 82 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்க அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனைகளின் விவரம் அரசு இணையதளத்தில் இடம் பெற்றிருக்கிறது. இந்த விவரங்களின்படி சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் 27 மருத்துவமனைகள் முழுவதுமாக நிரம்பிவிட்டன.

Related Stories: