ஆரணி நகராட்சியில் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டி எரிக்கும் அவலம்-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆரணி : ஆரணி நகராட்சி பகுதிகளில் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டி எரிப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. நகராட்சி சார்பில் 1 முதல் 18 வார்டுகள் வரை தனியார் நிறுவனமும், 18 முதல் 33 வார்டுகள் வரை நகராட்சி துப்புரவு பணியாளர்களும், துப்புரவு பணிகளை செய்து வருகின்றனர்.

அதன்படி, பல்வேறு பகுதிகளில் குப்பைத்தொட்டிகள் வைத்து குப்பைகளை  சேகரித்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடங்களுக்கு கொண்டு சென்று, மக்கும் மற்றும் மக்கா குப்பைகளாக தரம் பிரித்து அகற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நகராட்சியில் துப்புரவு பணியாளர் கொண்டு குப்பைகளை சரிவர அகற்றாமல் இருப்பதால் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் குப்பைகள் குவிந்துள்ளது. குறிப்பாக, பாரதியார் தெரு, கொசப்பாளையம், வாழப்பந்தல் செல்லும் சாலை, அருணகிரிசத்திரம், சைதாப்பேட்டை, விஏகே நகர், வடுக்கசாத்து செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைத்தொட்டிகள் வைக்காததால் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுகிறது.

மலைபோல் தேங்கியுள்ள குப்பைகளில் சில விஷமிகள்  தீ வைத்து விட்டு செல்கின்றனர். இதனால் ஏற்படும் நச்சுப்புகையால் சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. துர்நாற்றமும் வீசி வருகிறது.அதேபோல், கொசப்பாளையம் பகுதியில் உள்ள ஆரணி- தேவிகாபுரம் சாலை, வாழப்பந்தல் சாலைகளில், குப்பைகளை கொட்டி எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகையால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.

எனவே, நகராட்சி பகுதிகளில் தேவையான குப்பைத்தொட்டிகளை வைத்து குப்பைகளை சேகரிக்கவும், சாலையோரங்களில் குப்பைகளை கொட்டும் நபர்களுக்கு அபராதம் விதிக்கவும், மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அகற்றவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: