ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைக்கு மத்தியில் பொது எதிரியை வீழ்த்த இந்தியாவுக்கு உதவ தயார்: சீன வெளியுறவு அமைச்சகம் திடீர் அறிவிப்பு

புதுடெல்லி: ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளை இந்தியா சந்தித்து வரும் நிலையில், பொது எதிரியை வீழ்த்த இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் திடீரென அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவுவதற்கு முன்பாக கடந்தாண்டு வரை சீனாவில் இருந்து  மருத்துவ உபகரணங்களை இந்தியா இறக்குமதி செய்தது. ஆனால், எல்லை பிரச்னை  உள்ளிட்டவிவகாரங்களால் இருநாட்டு உறவில் பாதிப்பு ஏற்பட்டு, வர்த்தக  உறவுகளும் முறிந்தன. இதற்கிடையே இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் தெற்காசிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளன. இந்தியாவின் உள்நாட்டு நிலைமை மோசமாக உள்ள நிலையில், தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா  இதுவரை அதிகாரப்பூர்வமாக தடை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்னையை இந்தியா மோசமாக எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையை, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், ‘சர்வதேச ஒற்றுமை மற்றும் பரஸ்பர உதவியை அவசியமாக கருதி, அனைத்து  மனித குலத்தின் பொதுவான எதிரியான கொரோனாவை வீழ்த்த நாங்கள் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம்.

மருத்துவ விநியோகங்களில் இந்தியாவுக்கு  தற்காலிக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அங்கு ஏற்பட்டுள்ள கடுமையான  நிலைமையை கருத்தில் கொண்டு நாங்கள் உதவ தயாராக உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளது. ஆனால், மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்ய இந்தியா முயன்று வருகிறது என்று தெரிவித்தது. ஆனால், ஆக்சிஜன் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகளின் பட்டியலில் சீனா இல்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரம், வளைகுடா மற்றும் சிங்கப்பூரில் இருந்து ஆக்சிஜன் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எல்லை பிரச்னைக்கு மத்தியில், சீன வெளியுறவு அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை இருநாடுகளுக்கிடையே முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Related Stories: