22 லட்சம் கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ள நிலையில் மருத்துவ ‘ஆக்சிஜன்’ சிலிண்டர் விலை 600% உயர்வு: பற்றாக்குறையை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு விற்பனை..!

ஐதராபாத்: கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் 22 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வரும்நிலையில், மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் விலை 600 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. பற்றாக்குறையை பயன்படுத்தி கள்ளமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதால், தொடர்ந்து ஒரு வாரமாக தினசரி பாதிப்பு 3 லட்சத்திற்கும் மேலாக உள்ளது. தினசரி இறப்பு எண்ணிக்கையும் 2,000-ஐ தாண்டி வருகிறது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் 24 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் பலருக்கும் கொரோனா தொற்றின் தீவிரத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள். இதனால் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.

மத்திய அரசு, மருத்துவம் சாராத தேவைக்கு ஆக்சிஜன் விற்பனையைத் தடை செய்வது உள்பட பல்வேறு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. மகாராஷ்டிராவிலுள்ள ஆக்சிஜன் தயாரிப்பு மையத்தில் ஒரு நாளைக்கு 150 - 200 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 500-600 ஆக உயர்த்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறாக நாடு முழுவதும் ஆக்சிஜனின் தேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டாலும், ஒருபக்கம் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து வருகின்றன.

ஆக்சிஜன் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய பல மாநிலங்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆக்சிஜனை உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிடம் பெறப்பட்ட தகவலின்படி, ஒரு மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் விலை குறைந்தபட்சம் 500 சதவீதம் முதல் 600 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதே கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முன்னர், ஒரு மருத்துவ சிலிண்டர் விலை ரூ. 300 முதல் ரூ.400 வரை இருந்தது. அதே சிலிண்டர் தற்போது ரூ. 3,000-க்கு மேல் விற்கப்படுகிறது.

திடீர் பற்றாக்குறை காரணமாக கள்ளமார்க்கெட்டிலும் சிலர் விற்று வருவதாகவும், உற்பத்தி குறைந்ததால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதுகுறித்து ெதலங்கானா மாநில சுகாதார அமைச்சர் ஈடாலா ராஜேந்தர் கூறுகையில், ‘ஆக்சிஜன் பற்றாக்குறை விசயத்தில் சிலர் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி கள்ளச் சந்தையில் விற்பனை செய்கிறார்கள். அரசு அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஐதராபாத்தில் சிலிண்டர்களின் விலை ரூ.300-லிருந்து ரூ.2,400 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன’ என்றார். இவ்வாறாக நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

Related Stories: