மாட்டுத்தொழுவமாக மாறிய மேலூர் தாலுகா வளாகம்: பொதுமக்கள் அவதி

மேலூர்: மேலூர் நகரில் சுற்றி திரியும் கோயில் காளைகள் மற்றும் வளர்ப்பு மாடுகள் பகலில் ஓய்வெடுக்க மேலூர் தாலுகா அலுவலக வளாகத்தை நாடுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மதுரை மேலூர் தாலுகா வளாகத்தில் தாலுகா அலுவலகம், இ சேவை மையம், வாக்காளர் மையம், தாலுகா சப்ளை அலுவலகம், குற்றவியல் கோர்ட், தீயணைப்பு நிலையம், கருவூலம், சிறார் சிறை, போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் என ஏராளமான அரசு அலுவலங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த வளாகத்திற்கு வந்து செல்கின்றனர். இவர்களின் டூவீலர் மற்றும் கார்கள் இதே வளாகத்தில் தான் நிறுத்தப்பட வேண்டிய நிலை உள்ளது.

வளாகம் முழுவதும் மரங்கள் இருப்பதால் இங்கு எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும். இதனால் அந்த வளாகம் முழுவதும் வெயில் நேரத்தில் மாடுகள் வந்து படுத்து ஓய்வெடுப்பது வழக்கமாக மாறிவிட்டது. இதனால் தினசரி அங்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த முடியாமலும், மிரண்டு ஓடும் மாடுகளிடமிருந்து தப்ப முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மேலூர் தாலுகா அலுவலகத்தில் சுற்றித் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>