திருச்சுழி அருகே சிறுமழைக்கே சிதறிய பள்ளியின் சுற்றுச்சுவர்: தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக மக்கள் குற்றச்சாட்டு

திருச்சுழி: திருச்சுழி அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் சிறுமழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் பள்ளியின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததாக  அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.திருச்சுழி அருகே மறவர் பெருங்குடியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் வெள்ளையாபுரம், கல்லுபட்டி, சலுக்குவார்பட்டி உள்ளிட்ட  பல கிராமங்களிலிருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கொரோனா பிரச்னையால் தமிழகத்தில் கடந்த ஒரு  வருடத்திற்கு மேலாக பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் பராமரிக்கப்படாமல் அலங்கோலமாகி வருகிறது. இப்பள்ளியில் வாட்ச்மேன் இல்லாததால், மது  அருந்துவதற்கும், சீட்டு விளையாடுவதற்கும் சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களாக ெபய்த மழையில், பள்ளி  சுற்றுசுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இச்சுவர் தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பகுதி மக்கள் கூறுகையில், ஏனோ தானோ என்று  பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் நடந்தது. அதனால் சிறுமழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் சுவர் இடிந்து விழுந்துள்ளது. எனவே மாவட்ட  நிர்வாகம் சுற்றுச்சுவரை முறையாக கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Related Stories: