உலகத்தை உலுக்கிய கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு போலீஸ் அதிகாரி டெரிக் குற்றவாளி; அமெரிக்க நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; 75 ஆண்டுகள் வரை தண்டனை வாய்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில்போலீஸ் அதிகாரி டெரிக் சாவ்வினை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மின்னியாபோலிஸ் நகரில் கடந்தாண்டு மே 25ம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின இளைஞரின் கழுத்தில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவ்வின் முழங்காலை வைத்து அழுத்தியதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பிளாய்ட் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

ஜார்ஜ் பிளாய்ட் உயிருக்குப் போராடிய காட்சி அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கருப்பின மக்கள் மீதான நிறவெறியை கண்டித்துஉலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி டெரிக் சாவ்வின் உள்பட 4 போலீசார் பணிநீக்கம் செய்யப்பட்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். டெரிக் சாவின் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. டெரிக் சாவ்வின் மீதான விசாரணை மினசோட்டாவின் ஹென்னபின் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி பீட்டர் காகில் தலைமையிலான 12 நீதிபதிகள் கொண்ட அமர்வு, டெரிக் சாவ்வின்தான் குற்றவாளி என நேற்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், டெரிக் மீதான 2ம் நிலை உள்நோக்கமற்ற கொலை, 3-ம் நிலை கொலை மற்றும் 2ம் நிலை மனிதக் கொலை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்றத்துக்கான தண்டனை விவரம் இன்னும் 8 வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என்றும் அமர்வு தெரிவித்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளதால் சாவ்வினுக்கு 40 ஆண்டுகள் முதல் 75 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

* நிறவெறிக்கு முதல் அடி   

தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு பிளாய்ட் குடும்பத்தினருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார். பின்னர், வெள்ளை மாளிகையில் அவர் அளித்த பேட்டியில், ``சரியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இது போதாது. இத்துடன் நிறுத்தி கொள்ள கூடாது. பிளாய்டின் இழப்பை எதுவும் ஈடுகட்ட போவதில்லை. இருப்பினும், தற்போது நீதி இருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் நிறவெறிக்கு எதிரான முதல் அடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

* நீதி வென்றது

இந்த தீர்ப்பை ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். தீர்ப்பைக் கேட்டதும் ஜார்ஜ் பிளாய்ட் சதுக்கத்தில் மரியாதை செலுத்தியும், நீதித்துறைக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்தும் வருகின்றனர். நீதி வென்று விட்டதாக பலரும் கருத்து பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

* கருப்பின சிறுமி சுட்டுக்கொலை

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்படுவதற்கு 25 நிமிடங்கள் முன்பு, கொலம்பஸ் நகரில் பரபரப்பு சம்பவம் நடந்தது. இளம்பெண்ணை குத்தி விடுவதாக கத்தியை காட்டி மிரட்டிய 15 வயது கருப்பின சிறுமியை போலீசார் சுட்டனர். 4 குண்டுகள் துளைத்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கருப்பின சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அமெரிக்க மக்களை இது மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Related Stories: