திருச்சுழி அருகே களையிழந்த சுகாதார நிலையம் காத்திருக்கு பேராபத்து-விபத்திற்கு முன் தேவை ‘விழிப்பு’

திருச்சுழி : நரிக்குடி அருகே துணை சுகாதார நிலையம், செவிலியர் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலையில் செயல்படுகிறது.

நரிக்குடி அருகே உள்ள நாலூரில் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. சீனிமடை, உளுத்திமடை, செங்கமடை, புதையனேந்தல் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாலூரிலுள்ள துணை சுகாதார நிலையத்திற்கு அவசர சிகிச்சைக்காகவும், கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைக்கும் வந்து செல்கின்றனர். இங்கு ஒரு செவிலியர் வேலை பார்த்து வருகிறார்.

இக்கட்டிடம் கட்டப்பட்டு 20 வருடங்களுக்கு மேலாகியுள்ளதால் கட்டிடம் பராமரிக்கப்படாமல் இடியும் நிலையுள்ளது. அவ்வப்போது மழைக்காலங்களில் மேற்கூரை பெயர்ந்து விழுவதும் உண்டு. இதனால் கட்டிடம் இடிந்து விழுமோ என்ற பயத்ேதாடு செவிலியர் வேலை பார்க்கிறார். மேலும் சிகிச்சைக்கு வருபவர்களும் கட்டிடம் இப்ப விழுமோ, எப்ப விழுமோ என்ற அச்சத்துடன் வருகின்றனர். இக்கட்டிடத்தை அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் வேண்டுமென்று என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து நாலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அசோக் கூறுகையில், ‘‘எங்கள் கிராமத்திலுள்ள துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டதிலிருந்து இதுவரை பராமரிக்கப்பட்டதாக தெரியவில்லை. இக்கட்டிடம் இடியும் நிலையில் உள்ளது. இங்குள்ள செவிலியர் உயிரை துச்சமாக மதித்து, இக்கட்டிடத்திலே தங்கி பணியாற்றுகின்றார். கட்டிடத்தை சீரமைக்க பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை. கட்டிடம் இடிந்து விழுவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: