சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது

அண்ணாநகர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் நந்தா. இவரது மனைவி சுமதி (39), (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). கட்டிட தொழிலாளிகள். இவர்களது 17 வயது மகள், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில், வேலை விஷயமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, சென்னை அரும்பாக்கம் அசோகா நகரில் சுமதியும், அவரது மகளும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். அதே பகுதியை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் பசுபதிக்கும் (26), சுமதியின் மகளுக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியுள்ளது.

திருமணம் செய்வதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிய பசுபதி, கடந்த 17ம் தேதி தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். இதுபற்றி அறிந்த சுமதி, அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார், வழக்கு பதிந்து அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்த பசுபதி மற்றும் சிறுமியை போலீசார் மீட்டு, அண்ணாநகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், பசுபதி சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். போலீசார் விசாரணையில், சுமதியின் அக்கா மகன் செந்தில் (37) என்பவரும், சுமதி இல்லாதபோது அடிக்கடி வீட்டிற்கு வந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. அவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தங்கை என்றும் பாராமல் அண்ணனே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>