தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதம் ஏற்படுமா?: வாக்கு எண்ணிக்கை மேசைகளை குறைப்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் நாளை சத்யபிரத சாகு ஆலோசனை.!!!

சென்னை: வாக்கு எண்ணிக்கை மேசைகளை குறைப்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் நாளை தமிழக தலைமை தேர்தல்  அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி  சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. தொடர்ந்து, தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ம்  தேதி காலை 8.30 மணிக்கு எண்ணப்படுகிறது. ஒரே நேரத்தில் தபால் வாக்கு மற்றும் மின்னணு வாக்கு எண்ணிக்கை  தொடங்குகிறது.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக 10 முதல் 20 மணி நேரம் வரை ஆகலாம் என தகவல்  தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு பிறகு நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலிலும் வாக்கு எண்ணிக்கை நள்ளிரவை  தாண்டியும் வாக்குகள் எண்ணப்பட்டது. பீகாரில் முதல் 4 மணி நேரத்தில் 20% வாக்குகளே எண்ணப்பட்டதால் முடிவுகள் தெரிய  தாமதமானது. ஒவ்வொரு தொகுதியிலும் 14 மேசைகளுக்கு பதிலாக 7 மேசைகளில் எண்ணப்பட்டதால் தாமதமானதாக தேர்தல்  ஆணையம் விளக்கம் அளித்தது.

மே2-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குவதால் 9 மணி முதலே முன்னிலை நிலவரங்கள் வெளியாகும்.  மதியம் 2 மணி அளவில் 50% வாக்குகள் எண்ணப்பட்டுவிடும் என தேர்தல் அதிகாரிகள் எதிர்பார்பாகவுள்ளது.  மே-2ம் தேதி மாலைக்கு பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. அதிக வாக்காளர்களை கொண்ட  தொகுதிகளில் முடிவுகள் தெரிய நள்ளிரவு வரை கூட ஆகலாம்.தமிழக சட்டமன்ற தேர்தலில் 4.57 கோடி பேர்  வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் நாளை  தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தவுள்ளார். ஆலோசனை  கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மேசைகளை குறைப்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் நாளை ஆலோசிக்கவுள்ளார்.  கட்சிகளுடனான ஆலோசனைக்கு பிறகு மேசைகள் குறைப்பது குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.  கொரோனா பரவல் காரணமாக மேசைகளின் எண்ணிக்கை குறைக்கும் பட்சத்தில் தேர்வு முடிவு வெளியாகுவதிலும் தாமதம்  ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>