பல்வேறு மாவட்டங்களை தொடர்ந்து கரூரிலும் கொரோனா தடுப்பூசி காலி: நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் மக்கள் ஏமாற்றம்

கரூர்: பல்வேறு மாவட்டங்களை தொடர்ந்து கரூரிலும் கொரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கரூர் கஸ்தூரிபாய் தாய் சேய் நல மையத்தின் முன்புற சுவரில் தடுப்பூசி இருப்பு இல்லை என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால் மக்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம்களை மத்திய அரசு நடத்தி வருகிறது.

பொதுமக்கள் அதிகளவில் வந்து கொரோனா தடுப்பூசிகளை போட்டு செல்கின்றனர். நாடு முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை போக்குவதற்காக தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்நிலையில், தமிழகத்திலும் கொரோனா தொற்று பரவலின் 2வது அலை தீவிரமாக உள்ளது. அதிலும் கடந்த 7 நாட்களில் கொரோனா பரவல் அதிதீவிரமாக அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் ஏறத்தாழ இருமடங்காக அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி வருகிறது. தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை அரசு தீவிரப்படுத்தியது. கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதே நிலை தான் தற்போது கரூர் மாவட்டத்திலும் ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 8 அரசு மருத்துவமனைகள், 32 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 2 நாட்களாகவே கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் கஸ்தூரிபாய் தாய் சேய் நல மையத்தின் முன்புற சுவரில் ஒரு பேப்பரில் எழுதி வாசகம் ஒட்டப்பட்டிருந்தது. அதில், ‘‘கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு மருந்து இல்லாத காரணத்திற்காக கொரோனா தடுப்பூசி போடப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து மருந்து எப்போது வரும் என்ற தகவல் எங்களுக்கு தெரியாது. தற்போது வேறு எந்த அரசு மருத்துவமனைகளில் ஊசி போடுவதில்லை. தங்கள் சிரமத்துக்கு வருந்துகிறோம்’’. இவண் கஸ்தூர் பாஸ் தாய் சேய் நல மையம் கரூர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கரூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கரூர் மாவட்டத்துக்கு கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் இதுவரை 48,114 கொரோனா தடுப்பூசி மருந்துகள் வந்தது.

இந்த கொரோனா தடுப்பூசி மருந்துகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு விட்டது. சென்னையில் இருந்து கரூருக்கு இன்று 1,000 கொரோனா தடுப்பூசி மருந்துகள் வருகிறது. இவை தேவைக்கேற்ப அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கரூர் மாவட்டத்தில் விரைவில் கொரோனா தடுப்பூசி மருந்து பற்றாக்குறை போக்கப்படும் என்றனர்.

Related Stories:

>