கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ராணுவம் உதவ வேண்டும்: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

டெல்லி: கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ராணுவம் ஈடுபட வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2வது அலை சுனாமி அலையாக உருவெடுத்துள்ளது. தொடர்ந்து 5வது நாளாக நேற்றும் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது. இன்று ஒரேநாளில் நாடு முழுவதும் 2 லட்சத்து 59 ஆயிரத்து 170 பேர் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 1 கோடியே 53 லட்சத்து 21 ஆயிரத்து 089 ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் 19ம் தேதி மொத்த பாதிப்பு 1 கோடியை தாண்டிய நிலையில், 107 நாட்களுக்கப் பிறகு ஏப்ரல் 5ம் தேதி 1.25 கோடியை எட்டியது.

அதன்பின் சூறாவளியாக உருவெடுத்த கொரோனா அலை அடுத்த 15 நாட்களில் 25 லட்சம் அதிகரித்து 1.50 கோடியை எட்டியுள்ளது. அதே போல, கடந்த 24 மணி நேரத்தில் 1,761 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்து 530 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 லட்சத்து 31 ஆயிரத்து 977 ஆக அதிகரித்துள்ளது. இதனால், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. நோயாளிகள் படுக்கை வசதி இல்லாமலும், ரெம்டெசிவர் மருந்து, ஆக்சிஜன், வென்டிலேட்டர் தட்டுப்பாட்டாலும் பெரிதும் அவதிப்படுகின்றனர். நிலைமை கைமீறிப் போவதைத் தடுக்க பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்நிலையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ராணுவம் ஈடுபட வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ராணுவம், பாதுகாப்புத்துறை செயலர், டிஆர்டிஓ ஆகிய அமைப்புகள், தங்களிடம் உள்ள நிபுணர்கள், சிகிச்சை அளிப்பதற்கான கைவசம் உள்ள வசதிகளை, கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும். ராணுவ கமாண்டர்கள், சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களை சந்தித்து, தேவையான உதவிகளை அளிக்க ஏற்பாடு செய்யும் படி ராணுவ தலைமை தளபதிக்கு உத்தரவிட்டுள்ளார்.

ராஜ்நாத் சிங்கின் இந்த உத்தரவை அடுத்து ராணுவ குடியிருப்புகளில் உள்ள மருத்துவமனைகளில் பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என அங்குள்ள மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: