கொரோனாவால் பாதிக்கப்பட்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி: விரைந்து குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து.!!!

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைந்து குணமடைய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனாவை  கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் 5 நாட்கள் முழு ஊரடங்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது. குறிப்பாக, மாநில முதல்வர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி  தலைவர்கள் என முக்கிய தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதையடுத்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் குழுவின் கண்காணிப்பில் மன்மோகன் சிங் உள்ளார். கடந்த மாதம் மார்ச் 4-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங்  மற்றும் அவரது மனைவி குர்ஷரன் கவுர் ஆகியோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைந்து குணமடைய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் ஜி, விரைந்து குணமடைய விரும்புகிறேன். இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுக்கு மன்மோகன் சிங்கின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் நாட்டுக்கு தேவை என்று குறிப்பிட்டுள்ளார். 

Related Stories: