கொத்துக் கொத்தாக வட மாநிலங்களை காவு வாங்கும் கொரோனா: மருத்துவமனை, மயான வாசல்களில் காத்திருக்கும் மக்கள்..!

டெல்லி: கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் தலைநகர் டெல்லி, உத்திரப்பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், உள்ளிட்ட வடமாநிலங்கள் தத்தளிக்கின்றன. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்றி நோயாளிகள் தவித்து வருகின்றனர். மருத்துவமனை வாசல்களில் நோயாளிகள்... மயான வாசல்களில் பிணங்கள்... என்று வடமாநிலங்கள் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. தலைநகர் டெல்லியில் கொரோனாவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை வாசல்களில் காத்துக்கிடக்கும் அவலம் நிலவுகிறது. மருத்துவமனைகளில் இடம் இல்லாதால் பலர் ஆம்புலன்ஸ்களிலேயே காத்துக்கிடக்கின்றன. 10 மருத்துவமனைக்கு சென்றுவிட்டோம் எங்கும் அனுமதிக்கவில்லை என்று மூதாட்டி ஒருவர் கண்ணீர் விட்டு கதறும் காட்சிகள் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றன.

மருத்துவமனை வாசலில் ஸ்டெச்சரில் படுத்திருந்த அந்த மூதாட்டியின் வார்த்தைகளும் கண்ணீரும் டெல்லியில் கொரோனாவின் தீவிரத்தை வெளிச்சமிட்டு காட்டுபவை. பல மருத்துவமனைகளில் ஸ்டெச்சரிலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் ஒரே படுக்கையில் இரண்டு அல்லது மூன்று நோயாளிகளை படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. குஜராத்திலும் கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் ஆக்சிஜன் இன்றி தவிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன.

உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் சடலங்களை எரிக்க மாயணங்களில் இடம் இல்லாததால் சாலையோரங்களில் வரிசையாக வைத்து சடலங்களை எரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே போன்று மத்தியப்பிரதேசத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு மரணமடைந்தவர்களின் சடலங்கள் மாயணங்களில் காத்துக்கிடக்கின்றன. அங்குள்ள மாயணங்களில் நள்ளிரவிலும் சடலங்கள் எரிந்துகொண்டிருக்கின்றன. வரலாற்றில் இதுவரையிலும் காணாத காட்சிகளை இந்தியா கண்டுகொண்டிருக்கிறது. உயிர் காக்கும் மருத்துவமனைகளை நாடி செல்லும் நோயாளிகளை படுக்கையில் வைத்து சுவாசிக்க ஆக்சிஜன் கொடுத்து நோய் குணமாக ரெம்டெசிவிர் மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்க முடியாத நெருக்கடி நிலை நிலவுகிறது.

யார் காப்பாற்றுவார்கள் என்ற ஏக்கத்தோடு மருத்துவமனை வாசல்களில் காத்துக்கிடக்கும் மக்களின் நம்பிக்கையை யார் தான் காப்பாற்றுவது?..

Related Stories:

>