தாவரவியல் பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி: தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் மலர் தொட்டிகள் மற்றும் செடிகளில் மலர்கள் பூக்காத நிலையில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசனை அனுபவிக்கு ஊட்டிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஊட்டி தாவரவியல் பூங்கா உட்பட நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்படும். தாவரவியல் பூங்கா முழுவதிலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்படும். அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் மலர்கள் பூத்து காணப்படும். இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. மேலும், பூங்காக்களும் மூடப்பட்டன. மலர் கண்காட்சி உட்பட அனைத்து கண்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், இம்முறை சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

பொதுவாக ஏப்ரல் 2வது வாரத்தில் அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்துவிடும். அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான மலர் செடிகளில் மலர்கள் பூத்துவிடும். குறிப்பாக, மேரிகோல்டு, சால்வியா மற்றும் பேன்சி போன்ற மலர்கள் அதிகளவு பூக்கும். முன்னதாக பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்து செல்வது வழக்கம். இரண்டாவது வாரத்திற்கு மேல் அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்துவிடும். தொட்டிகளிலும் மலர்கள் பூக்கும் நிலையில், அவைகள் மாடங்களில் அடுக்கி வைக்கப்படும். ஆனால், இம்முறை இதுவரை பெரும்பாலான செடிகளில் மலர்கள் பூக்கவில்லை. தொட்டிகளிலும் மலர்கள் பூக்காமல் உள்ளது. பெரும்பாலான செடிகளில் மொட்டுக்கள் மட்டுமே காணப்படுகிறது. இதனால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவில் மலர்களை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

Related Stories:

>