பருத்தியில் பூச்சி தாக்குதல்: வேளாண்துறை ஆலோசனை

சாயல்குடி: பருத்தி செடிகளை பூச்சி தாக்குதல்களிலிருந்து எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என வேளாண் துறை தெரிவித்துள்ளது. கடலாடி அருகே மேலச்செல்வனூர், சிக்கல் பகுதிகளில் கோடை விவசாயமாக பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. சில இடங்களில் இரண்டாம் போக நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பயிர்கள் நன்றாக வளர்ந்து வருகிறது. இதனை வேளாண் துணை இயக்குனர் சேக்அப்துல்லா ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறும்போது, ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரி எனப்படும்  பருவமழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை பிரதானமாக உள்ளது. இந்தாண்டு பருவம் தவறி பெய்தாலும், கூடுதலாக மழை பெய்தது. இதனால் கடலாடி வட்டாரத்தில் கண்மாய், குளங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனை பயன்படுத்தி சிக்கல், மேலச்செல்வனூர் சுற்றவட்டார பகுதிகளில் நெல் இரண்டாம் போகமாக 180 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.

இதுபோன்று பருத்தி 903 ஏக்கரிலும், உளுந்து 15 ஏக்கர் பரப்பளவிலும் பயிரிடப்பட்டுள்ளது. விவசாயிகள் நன்கு பராமரித்து வருகின்றனர். இதனால் பயிர்கள் நன்றாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் பருத்தியை கூன் வண்டு, மாவு பூச்சிகள் தாக்கி வருவதாக விவசாயிகள் கூறினர். இதனை கட்டுப்படுத்த இயற்கை உரமான வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். ஏக்கருக்கு 100 கிலோ இடவேண்டும். செடிகளில் வேர்ப்பகுதியில் மண் அணைப்பு செய்தல் வேண்டும். மேலும் மாவுபூச்சியை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் டைமெத்தோலெட் 2 மி.லி கலந்து தெளிக்கவேண்டும். இந்த முறையை பின்பற்றினால் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். மேலும் கூடுதல் விபரங்கள், உதவிகள் தேவைப்பட்டால் விவசாயிகள் கடலாடி வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி உதவி பெறலாம்’’ என்றார். இந்த ஆய்வினர் போது கடலாடி வேளாண் உதவி இயக்குனர் சுந்தரவள்ளி, வேளாண் அலுவலர் கிருத்திகா, உதவி அலுவலர் கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: