ஊரடங்கு காலத்தில் உள்கட்டமைப்பு பணியில் மேம்பாடு: சரக்கு ரயில்களின் வேகம் இருமடங்கு அதிகரிப்பு..! மணிக்கு 20 கி.மீ.,ல் இருந்து 44 கி.மீ.,ஆக உயர்வு

சேலம்: ஊரடங்கு காலத்தில் தண்டவாளம், பாயின்ட், சிக்னல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தியதன் மூலம் சரக்கு ரயில்களின் வேகம் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் என அனைத்து வித சரக்குகளையும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்க ரயில் போக்குவரத்து பெரிதும் உதவி வருகிறது. சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்படும் சரக்கின் அளவை விட பன்மடங்கு அதிகமாக சரக்கு ரயில்களில் அனைத்து வித சரக்குகளும் எடுத்துச் செல்லப்படுகிறது. வழக்கமாக நாடு முழுவதும் இயங்கும் சரக்கு ரயில்கள், சராசரியாக 20 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வந்தது. இதன் வேகத்தை அதிகப்படுத்த ரயில்வே தண்டவாளம், பாயிண்ட், சிக்னல் உள்ளிட்ட உள் கட்டமைப்புகளை மேம்படுத்த ரயில்வே திட்டமிட்டது.

ஆனால், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் இப்பணியை தொடர்ந்து செய்திட இயலாமல் இருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டவுடன், நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த உள்கட்டமைப்பு பணிகளை முடித்திட ரயில்வே நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதன்பேரில், நாடு முழுவதும் பழைய ரயில்வே பாலங்கள் இடித்து அகற்றப்பட்டு புதிய பாலங்கள் கட்டப்பட்டன. அதேபோல், மிகவும் ஆபத்தான வளைவாக இருக்கும் பாதைகளை சீரமைத்தல், பழைய தண்டவாளங்களை மாற்றுதல், பாயிண்ட், சிக்னல் மாற்றம் என உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக செய்யப்பட்டது. இந்த பணிகள் 80 சதவீதத்திற்கும் மேல் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தற்போது, பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்களின் வேகம் வழக்கத்தை விட அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு தண்டவாள பராமரிப்பு மேம்பட்டுள்ளது.

ரயில்வே பாதுகாப்பு ஆணையர்கள் அறிவுறுத்தியபடி ரயில்களை இயக்க வேண்டும் என்பதால், பயணிகள் ரயில்களின் வேகம் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், சரக்கு ரயில்களின் வேகம் நாடு முழுவதும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை சராசரியாக சரக்கு ரயில்கள் 20 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வந்தது. இதுவே தற்ேபாது சராசரியாக சரக்கு ரயில்கள் 44 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. சில வழித்தடங்களில் 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் சரக்கு ரயில்கள் செல்கிறது. இருமடங்கு அளவிற்கு சரக்கு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டதால், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சரக்கை விரைந்து கொண்டுச் சேர்க்க முடிகிறது. வட மாநிலங்களில் இருந்து கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்கள் தென் மாநிலங்களுக்கு கொண்டு வரப்படுகிறது. அதேபோல், இங்கிருந்து நெல், அரிசி, காய்கறி, மருத்துவ பொருட்கள், இரும்பு பொருட்கள் அதிகளவு வட மாநிலங்களுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. இந்த அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் முன்பை விட மிக விரைவாக கொண்டு சேர்க்கப்படுகிறது.

இதனால், ரயில்வே நிர்வாகத்தால் சரக்குகள் கையாள்வதும், அதன்மூலம் கிடைக்கும் வருவாயும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘தண்டவாள பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை முழுவீச்சில் ஊரடங்கு காலத்தில் ரயில்வே நிர்வாகம் செய்து முடித்துள்ளது. இதனால் தற்போது சரக்கு ரயில்களின் வேகம் இருமடங்கு அதிகரிக்கப்பட்டு, சராசரியாக மணிக்கு 44 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இதனை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் (2020-21) மட்டும் 1,233 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டை விட அதிகமாகும். தற்போதும் ரயில்களின் மூலம் அதிகப்படியான அளவு சரக்குகள் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகிறது. முன்பு இருந்ததை விட தற்போது விரைவாக சரக்குகளை கொண்டு சேர்ப்பதால், பலரும் ரயில்வேயை நாடி வருகின்றனர்,’’ என்றனர்.

Related Stories: