சடலத்தை வைத்து அரசியல் செய்வது மம்தாவின் பழக்கம்: பிரதமர் மோடி கடும் தாக்கு

அசன்சோல்: மேற்கு வங்கத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, ‘சடலத்தை வைத்து அரசியல் செய்வது மம்தாவின் பழக்கம்’ என்று குற்றம்சாட்டினார். மேற்கு வங்கத்தின் தொழில்நகரமான அசன்சோலில் வரும் 26ம் தேதியன்று 7ம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: மேற்கு வங்கத்தில் நடந்த முதல் 4 கட்டத் தேர்தல்களிலேயே திரிணாமுல் காங்கிரஸ் உடைந்து சிதறிவிட்டது தெரிகிறது. இறுதிக்கட்டத் தேர்தலுக்குள் மம்தாவின் தோல்வி உறுதியாகிவிடும்.

சமீபத்தில், வைரலான ஆடியோ டேப்பை கேட்டிருப்பீர்கள். அதில் மம்தாவும், திரிணாமுல் காங்கிரசின் சிதால்குச்சி தொகுதியின் வேட்பாளரான பார்த்தா பிரதிம் ராயும், கூச் பெகர் உயிரிழப்பை அரசியல் செய்வது தொடர்பாக பேசுகிறார்கள். அந்த ஆடியோவின் நம்பகத்தன்மை என்னவென்பது தெரியாது. ஆனால், சடலத்தை வைத்து அரசியல் செய்வது மம்தாவின் பழைய பழக்கம் என்பது அனைவரும் அறிந்ததுதான். பிஎம் கிசான் திட்டம், ஆயுஷ்மான் பாரத் போன்ற மத்திய அரசின் நலத்திட்டங்கள் மேற்கு வங்க மக்களுக்குக் கிடைக்க விடாமல் தடுப்பதற்கான சுவராக மம்தா பானர்ஜி இருக்கிறார். பிரதமருடன் நடைபெறும் மாநில முதல்வர்களின் கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்வதில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

* எனது போன் பேச்சுகள் ஒட்டு கேட்கப்படுகிறது

மேற்கு வங்கத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில், ‘‘திரிணாமுல் காங்கிரசின் மேம்பாட்டு திட்டங்களை சகித்துக் கொள்்ள முடியாமல், பாஜ பல்வேறு சதி திட்டங்களில் ஈடுபடுகிறது. அவர்கள் எனது தினசரி தொலைபேசி பேச்சை கூட ஒட்டு கேட்கிறார்கள். இது பற்றி மேற்கு வங்கத்தின் சிஐடி போலீசார் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிப்பேன். இந்த செயலில் ஈடுபடும் யாரையும் விட மாட்டேன். இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதும் எனக்கு தெரியும்,’’ என்றார்.

Related Stories:

>