கீழடி 7ம் கட்ட அகழாய்வில் பழங்கால சுடுமண் தாயக்கட்டை, பானை ஓடு கண்டெடுப்பு

திருப்புவனம்: கீழடி 7ம் கட்ட அகழாய்வில் பழங்கால கல் உழவு கருவி, சுடுமண் தாயகட்டை, கருப்பு வண்ண பானை ஓடுகள் கிடைத்துள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்.13ம் தேதி தொடங்கியது. கணேசன் என்பவரது நிலத்தில் நடந்து வரும் அகழாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய சிறிய பானை, பானை ஓடுகள் கண்டறியப்பட்டன. நேற்று சுடுமண் தாயக்கட்டை கண்டறியப்பட்டது. நான்கு பக்கமும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு புள்ளிகள் கொண்ட இந்த தாயக்கட்டை முழுமையான அளவில் கிடைத்துள்ளது. மேலும் தொடக்க காலத்தில் உழவு பணிக்காக பயன்படுத்திய கல்லால் செய்யப்பட்ட கொழுவும் கிடைத்துள்ளது.

கல் கொழுவின் மேற்புறம் கூர்மையாக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் மண்ணை கீறும் வகையில் பளபளப்பாக உள்ளது. கருப்பு வண்ண பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இதுவரை கருப்பு, சிவப்பு ஓடுகள் கிடைத்துள்ள நிலையில் தற்போது முழுமையாக கருப்பு வண்ண ஓடு கிடைத்துள்ளது. கீழடியில் பிப்.13ம் தேதி அகழாய்வு தொடங்கினாலும் நேற்றுதான் தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம், தொல்லியல் ஆலோசகர் பேராசிரியர் ராஜன் ஆகியோர் அகழாய்வு தளத்திற்கு வருகை தந்தனர். அகழாய்வு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர். இதேபோல் அகரம், கொந்தகையிலும் தொடர்ந்து அகழாய்வு நடந்து வருகிறது.

Related Stories:

>