நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்!: ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் இடங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி..!!

டெல்லி: நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் இறப்பதாக வந்த புகாரை அடுத்து இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆக்சிஜன் சிலிண்டர்களை நிரப்பும் இடங்களும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கியிருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக மருத்துவ ஆக்சிஜன் தேவை என்பது மருத்துவமனைகளில் அதிகரித்திருக்கிறது. மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் 4 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையானது மருத்துவமனைகளில் நிலவி வருவதால் நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டத்தை தலைநகர் டெல்லியில் இன்று நடத்தினார். இது தொடர்பாக பிரதமரின் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில், ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் நாடு முழுவதும் அனைத்து ஆக்சிஜன் நிலையங்களிலும் அதன் கொள்ளளவுக்கு ஏற்ப ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் இடங்களும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றி செல்லும் டேங்கர் உள்ளிட்ட வாகனங்கள் தங்கு தடையின்றி செல்வதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து மத்திய அரசு தேவையான உதவிகளை அனைத்து மாநிலங்களுக்கும் உடனடியாக செய்துகொடுக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் முடிவெடிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>