கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்: தலைமை நீதிபதியை சந்தித்த பிறகு ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று காலை ஒரு வழக்கின் விசாரணை நடந்துகொண்டிருந்தபோது  தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி நீதிமன்றத்தில் இருந்த அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணிடம் கொரோனா 2வது அலை கடந்த ஆண்டைவிட வேகமாக பரவி வருகிறதே. இதை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்தில் இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்று கேட்டார். அதற்கு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் பதில் அளித்தார்.

இதை கேட்ட தலைமை நீதிபதி, உயர் நீதிமன்றத்தில் கொரோனா தடுப்பு தொடர்பாக ஆலோசிக்க  நிர்வாக குழு கூட்டம் நடைபெறவுள்ளது என்றார். அப்போது, அட்வகேட் ஜெனரல், இது தொடர்பாக விளக்கம் தர சுகாதாரத்துறை செயலாளர்தான் சரியான நபர். அவரை வரச்சொல்கிறேன் என்றார். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை சந்தித்து உயர் நீதிமன்றத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் கூறியதாவது: இந்திய அளவில் கொரோனா இரண்டாவது அலை தினமும் 2 லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் அந்த அளவுக்கு இல்லை. உயர் நீதிமன்றத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை நீதிபதி ஆலோசனை கேட்டார். நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் அறைகள், வக்கீல்கள் அறைகளில் கொரோனா பரவாமல் தடுக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்று கேட்டார். பொதுவாக பணி செய்யும் இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும். மக்கள் அதிகம் கூடுவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டால் அதை தடுக்க என்ன நடவடிக்கை, 12 ஆயிரம் பேருக்கு அதிகமாக பாதிப்பு ஏற்பட்டால் அதை தடுக்க என்ன நடவடிக்கை என்பது குறித்து முதல்வர் மட்டத்தில் ஆலோசனை நடந்து வருகிறது. கொரோனா தடுப்பூசியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சமாக உள்ளது. தினமும் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் பேர்வரை தடுப்பூசி போட இலக்கு உள்ளது. தகொரோனாவை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேலும் தீவிரப்படுத்தப்படும். கபசுர குடிநீர் போன்ற இந்திய மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆணையை திரும்ப பெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: