திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமல் அலட்சியம் சின்னசேலம் பேரூராட்சியில் அடிக்கடி பற்றி எரியும் குப்பை-புகை மூட்டத்தால் மக்கள் அவதி

சின்னசேலம் : சின்னசேலம் பேரூராட்சியில் விஜயபுரம், காந்தி நகர், அண்ணா நகர், திருவிக நகர், அம்சாகுளம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. பொதுவாக சின்னசேலம் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியாகும். இதனால் சின்னசேலம் பகுதியில் ஒரு நாளைக்கு சுமார் 7 டன் குப்பைகள் டிராக்டர் மூலம் தெருத்தெருவாக சேகரிக்கப்படுகிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் சின்னசேலம் பேரூராட்சியின் மூலம் கூகையூர் ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனை அருகில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் சேகரிக்கப்பட்டு, பின்னர் தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகளை தனியே எடுத்து உரமாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக பல லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட இயந்திரங்கள், தேவையான வேலையாட்கள், விசாலமான இடம் உள்ளது.

ஆனால் சின்னசேலம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கொட்டி சேகரிப்பது கிடையாது. மாறாக சின்னசேலம் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மாணவர் விடுதிக்கு அருகில் உள்ள காலி இடத்தில் மலைபோல கொட்டி சேகரித்து வைத்துள்ளனர். இந்த குப்பைகளில் வீசும் துர்நாற்றத்தால் அந்த பகுதி சுகாதார சீர்கேடாக மாறுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த குப்பைமேடு அடிக்கடி பற்றி எரிவதால் அதிலிருந்து வெளியேறும் புகையால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள், மாணவர்கள், படுக்கை நோயாளிகள் மூச்சு திணறலால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாகவே தொடர்ந்து அடிக்கடி தீவிபத்து ஏற்படுவதால் தீயணைப்பு துறையினருக்கும் கூடுதல் பணிச்சுமையாகிறது.

தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் திடக்

கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் சின்னசேலம் பேரூராட்சியில் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படாததால் மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதை ஆய்வு செய்ய வேண்டிய உதவி இயக்குநரும் கண்டு

கொள்வதில்லை.

ஆகையால் சின்னசேலம் அரசு மருத்து வமனைக்கு அருகில் மலைபோல் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னசேலத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது கலெக்டர், துணை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

Related Stories: