சுகாதாரம், வருவாய்த்துறை என்ன செய்கிறது? கொரோனா அபராதத்தொகையை போலீசாரை வசூலிக்கச் சொல்வதா?விருதுநகர் மாவட்டத்தில் புகைச்சல்

விருதுநகர் : கொரோனா 2வது அலை பரவிவலில் மாஸ்க், சமூக இடைவெளி பின்பற்றாதோருக்கான அபராத வசூல் செய்யும் பணியை போலீசார் தலையில் கட்டி வேடிக்கை பார்ப்பதாக பிரச்னை  வெடித்துள்ளது.கொரோனா தொற்று பரவலில் முதல் தொற்று பரவிய போது நகராட்சி, ஊராட்சிகள் கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கையில் முழுவீச்சாக செயல்பட்டது. மாஸ்க் மற்றும் சமூக இடைவெளி விழிப்புணர்வு பிரசாரம், அபராதம் விதிப்பு நடவடிக்கைகளை நகராட்சி, ஊராட்சி, வருவாய்த்துறையினர் செய்தனர்.

தற்போது கொரோனா 2வது தொற்று பரவல் அதிவேகம் எடுத்துள்ள நிலையில் நகராட்சி, உள்ளாட்சி, வருவாய்த்துறை சார்பில் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கைகள் எதுவும் செய்யவில்லை. சமூக இடைவெளி, மாஸ்க் விழிப்புணர்வு பிரசாரம் எதுவும் செய்யவில்லை.

கொரோனா தொற்று 2வது பரவல் தொடர்பாக அடித்தட்டு மக்களுக்கு தெரியாத நிலையில், போலீசார் மூலம் சுகாதாரத்துறை ரசீதை பயன்படுத்தி மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200, சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை என்றால் ரூ.500 அபராதம்  வசூலிக்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இரண்டாவது தொற்று பரவல் பற்றி அனைத்து தரப்புமக்களுக்கும் விளங்கும் வகையில் அறிவிப்புகள் செய்யவில்லை. கிருமி நாசினி தெளிக்கவில்லை. எதையும் செய்யாமல் வசூல் நடவடிக்கை மட்டும் எந்த விதத்தில் நியாயம்  என அடித்தட்டு, நடுத்தர மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அத்துடன் கொரோனா தொற்று பரவல் விவகாரம் எல்லாம் சுகாதாரத்துறை, நகராட்சி, ஊராட்சி என உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த்துறையினர் மூலம் செய்ய வேண்டியது. ஆனால், அதை விட்டுவிட்டு, சுகாதாரத்துறை ரசீதை போலீசில் வழங்கி மாஸ்க் அபராதம் ரூ.200, சமூக இடைவெளி அபராதம் ரூ.500  வசூலிக்க செய்வது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வாகன லைசென்ஸ், ஹெல்மெட், சட்ட ஒழுங்கு பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டிய எங்களை எப்படி வசூலில் ஈடுபடுத்தலாம் போலீசார் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், உள்ளாட்சி அலுவலர்கள், வருவாய்த்துறையினர் மூலம் வசூல் நடவடிக்கை செய்யவும், அப்போது பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீசாரை உடன் நிறுத்தும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம், போலீஸ் நிர்வாகம் செய்ய வேண்டுமென போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: