ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் மக்கள்

* * கழிவுநீர், குப்பைகளால் சுகாதார சீர்கேடு

* மூடிய நூலகங்களை திறக்கவும் கோரிக்கை

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியில் கழிவுநீர் தேங்கி, குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் அடிப்படை வசதிகள் பின்தங்கியுள்ளதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பாச்சல் ஊராட்சியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சிகளிலேயே மிகப்பெரிய ஊராட்சியாக இந்த ஊராட்சி விளங்கி வருகிறது. இதனால் பொதுமக்களின் பல்வேறு நலனுக்காக இதை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுகுறித்து தரம் உயர்த்த கோரி திமுகவினரால் அதிகாரிகளிடம் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஊராட்சியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளதால் பொதுமக்களின் அடிப்படை தேவையான சாலை வசதி, தெரு வசதி, கால்வாய் வசதி, மின்விளக்கு, குடியிருப்பு வசதி என அனைத்தும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகிறது. மேலும், இந்த ஊராட்சியில் பல்வேறு அரசு கட்டிடங்கள் அதாவது நூலக கட்டிடங்கள் அமைக்கப்பட்டு திறக்கப்படாமலும், மாவட்ட கிளை நூலக கட்டிடம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. மேலும், ஆசிரியர் நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள கூட்டுறவு கடன் சங்க கட்டிடம் திறக்கப்படாமல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

இந்த ஊராட்சியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் காவிரி கூட்டுக் குடிநீர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்ட நிலையில் தற்போது நான்கு நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படுகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், பல்வேறு இடங்களில் ஆங்காங்கே ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்படாமல் குப்பைகள் மலைபோல் குவித்தும், தொன்போஸ்கோ நகர் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை குப்பைகள் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. இதனை ஊராட்சி நிர்வாகம் அகற்றாமல் இருப்பதால் பஸ்சுக்காக வரும் பயணிகள் முகம் சுளித்து செல்கின்றனர்.

மேலும் பல்வேறு இடங்களில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளதால் அதை சீரமைக்க தகவல் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லையாம். இந்நிலையில், லட்சுமி நகர், அன்னை நகர், அம்பேத்கர் நகர், ஆசிரியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாயில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியில்லாமல் கால்வாய் முழுவதும் நிரம்பி 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலையில் வழிந்து ஓடுவதால் பொதுமக்கள் சாலை வழியாக நடந்து செல்லவும், பயணிக்கவும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுபோன்று ஊராட்சி முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கழிவுநீர் கால்வாய் வசதி இன்றியும் குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி உள்ளிட்டவைகளுக்காக ஏங்கி வருகின்றனர். எனவே சுகாதார சீர்கேட்டில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: