மேற்குவங்கத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது ஒரு இனப்படுகொலை : முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது ஒரு இனப்படுகொலை என்று, அம்மாநில முதல்வர் குற்றம்சாட்டினார். மேற்குவங்கம் மாநிலம் சிதல்குச்சி தொகுதியில் ஜோர் பாத் கியில்  பூத் எண் 126ல் பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படை போலீசார் நடத்திய  துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் இறந்தனர். ஒருவர் காயமடைந்ததாக  கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு போலீஸ்  பார்வையாளர் விவேக் துபே தேர்தல் ஆணையத்திடம் அளித்த அறிக்கையில்,  ‘கிராமவாசிகள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை பறிக்க  முயன்றதால் துப்பாக்கி சூடு நடந்துள்ளது’ என்று தெரிவித்தார்.

ஆனால்,  விதிகளை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முதல்வர் மம்தா பானர்ஜி  குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கூச் பெஹாரில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் மார்பில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அசாதாரண சூழல் ஏற்பட்டிருந்தால் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை முழங்காலுக்கு கீழே சுட்டிருக்கலாம். இது ஒரு இனப்படுகொலை; மத்திய தொழில் பாதுகாப்பு படையானது, தொழில்துறை விவகாரங்களை சமாளிக்க மட்டுமே தகுதி பெற்றது. ஆனால், பொதுமக்கள் கூடும் கூட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அனுபவம் அதற்கு இல்லை.

மத்திய அரசு உண்மையை மறைக்க முயற்சிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க எனக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை. எம்சிசி (மாதிரி தேர்தல் நடத்தை விதிகள்), மோடி நடத்தை  விதியாக மாறிவிட்டது. பாஜகவை திருப்திப்படுத்துவதற்காக, தற்போது 72 மணி நேர தடை (3 நாள்) விதிக்கப்பட்டுள்ளது. நான்காம் நாள் மக்களை சந்திப்பேன்’ என்று தெரிவித்தார்.

Related Stories: