அர்ச்சகர்கள் 12 பேருக்கு தொற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு முற்றிலும் தடை?: தேவஸ்தானம் ஆலோசனை

திருமலை: கடந்த ஆண்டு கொரோனா தொற்று தீவிரமடைந்தபோது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் ஒரு அர்ச்சகர் உயிரிழந்தார். இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயில் சில நாட்கள் மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா 2வது அலையாக பரவி வருகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,765 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இறப்பு சதவீதமும் அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டிக்கெட் எண்ணிக்கை 23 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

தொடர்ந்து நாளை மறுதினம் முதல் இலவச தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏப்ரல் 31ம் தேதி வரை தினந்தோறும் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் என ₹300 சிறப்பு தரிசன டிக்கெட் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் மற்றும் கல்யாண உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை, ஊஞ்சல் சேவை உள்ளிட்ட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில் ஏழுமலையான் கோயிலில் பணிபுரியும் 12 அர்ச்சகர்களுக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்படுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவில் தேவஸ்தான உயரதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 4000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தற்போது அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மீதமுள்ள ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மாநிலம் முழுவதும் கொரோனா பரவுவதை குறைக்க தடுப்பூசி செலுத்தப்படுவதை விரைவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கிராம மற்றும் வார்டு செயலகத்தில் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>