வனப்பகுதியில் பசுந்தீவனங்கள் குறைந்ததால் முதுமலை வளர்ப்பு யானைகள் எடை குறைந்தன

கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் பகுதிகளில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு கும்கி யானைகள், சவாரிக்கு பயன்படும் யானைகள், ஓய்வு பெற்ற யானைகள் மற்றும் குட்டி யானைகள் உள்ளிட்ட 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு யானைக்கும் ஒரு பாகன் மற்றும் உதவியாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டு யானைகள் பராமரிக்கப்படுகின்றன.

தினசரி காலை, மாலை இருவேளையும் மாயாற்றில் குளிக்க வைக்கப்படும் யானைகளுக்கு  ராகி, கொள்ளு, அரிசி உள்ளிட்ட  தானியங்களின் உணவும் வெல்லம், தேங்காய், சத்து மாத்திரைகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பகல் நேரங்களில் இந்த யானைகள் வனப் பகுதிக்கு பசுந்தழைகள் மேய்ச்சலுக்காக அழைத்து செல்லப்படுகின்றன. யானைகளின் உடல் நலத்தை பராமரிக்க மருத்துவர்களும், பணியாளர்களும் உள்ளனர்.

இந்த யானைகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை உடல் எடை பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். யானைகளின் வயது, உயரம், உடல் எடை போன்றவற்றை கண்காணித்து அதன் அடிப்படையில் அவற்றிற்கு தேவையான உணவு, மருந்து, பயிற்சி முறைகளில் மாற்றங்கள் செய்யப்படும்.

இதேபோல், நேற்றும் இங்குள்ள யானைகளுக்கு எடை பரிசோதனை நிகழ்ச்சி தொரப்பள்ளியில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடிகளை எடை மேடையில் நடைபெற்றது. வயதான யானைகள், குட்டி யானை, மற்றும் மஸ்து ஏற்பட்ட யானைகள் உள்ளிட்ட 10 யானைகள் தவிர்ந்த 28 யானைகளுக்கு எடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், ஒவ்வொரு யானைகளுக்கும் 20 முதல் 120 கிலோ வரை எடை குறைந்து உள்ளதாகவும், வழக்கமாக கோடை காலங்களில் வனப்பகுதிகளில் பசுந்தழை உணவு பற்றாக்குறை ஏற்படுவதால் யானைகளின் எடை ஓரளவு குறையும் என்றும், மழைக் காலத்தில் உடல் எடை அதிகரிக்கும் என்றும், உடல் எடை மாற்றத்திற்கான காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் யானைகளின் பராமரிப்பு முறைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: