தெற்கு டெல்லி பகுதியில் மக்கள் மீது குரங்குகளை ஏவிவிட்டு கொள்ளையடிக்கும் கும்பல் கைது: 2 பேரை பிடித்தது போலீஸ்

புதுடெல்லி: தெற்கு டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் மக்கள் மீது குரங்குகளை ஏவிட்டு அச்சுறுத்தி பணம், நககைளை கொள்ளையடிக்க முயற்சித்த வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். தெற்கு டெல்லியின்  மால்வியா நகரில் கடந்த மார்ச் 2ம் தேதியன்று வக்கீல் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் சூழ்ந்து கொண்டு அவரை ஆட்டோ ரிக்‌ஷாவுக்குள் தள்ளினர். பின்னர் வக்கீலின் முன் இருக்கையில் ஒரு குரங்கயைும் பின் இருக்கையில் மற்றொரு குரங்கயைும் அமரவைத்து வக்கீலிடம் பணம் கேட்டு மிரட்டினர். தரமறுத்தால் குரங்கை மேலே ஏவிவிடுவதாக கூறி பயமுத்தினர். இதனால் வக்கீல் தனது பர்சை பாக்கெட்டில் இருந்து எடுத்தார். அந்த சமயத்தில் மூன்று பேர் கும்பல் 6000 பணத்துடன் பர்சை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட வக்கீல் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து இந்த கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், இந்த கும்பலை சேர்ந்த இரண்டு பேர் கிர்கி விரிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் குரங்குகளுடன் வந்து நிற்பதாக போலீசார் தகவல் கிடைத்தது. போலீசார் அவர்கள் இருவரையும் அருகில் சென்று மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த இரண்டு குரங்குகள் பறிமுதல் செய்யப்பட்டு அவை வனவிலங்கு பூங்கா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த குரங்கை இந்த கும்பல் துக்ளகாபாத் வனத்தில் இருந்து பிடித்து வந்ததும், கைது செய்யப்பட்ட பல்வான் நாத்(26), மற்றும் விக்ரம் நாத்(23) இருவரும் ஓக்லா மோர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த கும்பலில் உள்ள மூன்றாம் நபர் அஜித் என்பவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.

Related Stories: