சேலத்தில் 2வது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டார் முதல்வர் எடப்பாடி

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த மார்ச் 11ம் தேதி கொரோனா தடுப்பூசி முதல் தவணையை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போட்டுக் கொண்டார். தேர்தல் முடிந்து சேலத்தில்  தங்கியுள்ள முதல்வர் நேற்று மாலை, சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். பின்னர் அவர்  நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழகத்திற்கு 54,85,820 தடுப்பூசி வந்துள்ளது. இதில், கோவிஷில்டு தடுப்பூசி 47,03,590ம், கோவாக்‌சின் தடுப்பூசி 7,82,130ம் வந்துள்ளது. மாநிலம் முழுவதும் 34,87,036 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தற்போது கையிருப்பாக சுமார்  20 லட்சம் தடுப்பூசி இருக்கிறது.

தமிழ்நாட்டில் மக்கள் தொகை 8.26 கோடி. இதில், 4.21 சதவீத பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. போதுமான அளவுக்கு மருந்துகள், மருத்துவமனையில் படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகள் இருக்கிறது.  அரசு கட்டுப்பாடுகளை தற்போது  அறிவித்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதனால், வழிகாட்டுதல்களை தவறாமல் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். அரசு அறிவித்த வழிகாட்டுதல்களை முறையாக மக்கள் பின்பற்றினால், முழு ஊரடங்கு  வராது. நோய் தொற்று அதிகரித்தால், மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முழு ஊரடங்கு பற்றி அரசு அறிவிக்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: