அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தவரை தாக்கிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: போலீஸ் நிலையத்தில் புகார்

திருச்சி: வேதாரண்யம் அருகே அதிமுகவில் இருந்து விலகி  திமுகவில் சேர்ந்தவரை துக்க வீட்டில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தலைஞாயிறு அடுத்த ஆய்மூர் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்(50). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். தற்போது கூட்டுறவு சங்க தலைவராக உள்ளார். இவர் முன்பு அதிமுகவில் இருந்தார். அப்போது அமைச்சர் ஓ.எஸ் மணியனுடன் நெருக்கமாக இருந்தார்.  திடீரென  கடந்த 2 மாதங்களுக்கு முன் அறிவழகன் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுக்காக தேர்தல் பணியாற்றினார்.

இந்நிலையில் நேற்று ஆய்மூரில் வேதலிங்கம் என்பவர் இறந்து விட்டார். அவரது இறுதி சடங்கில் அறிவழகன், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் சடலத்துக்கு மாலை போட வந்தபோது, அறிவழகன், சடலத்தை குளிப்பாட்டும் பணி நடக்கிறது. சிறிது நேரத்துக்கு பின்னர் மாலை போடலாம் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவழகனை பார்த்து, நன்றி கெட்டவனே என கூறியதாகவும், இதனால் ஏற்பட்ட வாக்குவாததத்தில் அமைச்சரும், அவரது ஆதரவாளர்களும் அறிவழகனை திட்டி நெஞ்சில் குத்தி தாக்கியதாகவும்  கூறப்படுகிறது.

இதில் காயமடைந்ததாக அறிவழகன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். பின்னர் இரவே வீடு திரும்பிய அவர், அமைச்சர் தாக்கியது பற்றி நள்ளிரவு தலைஞாயிறு போலீசில் புகார் அளித்தார். அதில் அமைச்சரும், அவரது ஆதரவாளர்களும் தன்னை திட்டி நெஞ்சில் குத்தியதாக கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த உள்ளாட்சி தேர்தலில் அறிவழகன் வேறுகட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், இதனால் அவரை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஓரங்கட்டியதாக அமைச்சர் தரப்பில் கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து வேறு கட்சியில் சேர்ந்தவரை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தாக்கியதாக கூறப்படுவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: