பக்தர்களுக்கு அனுமதி இல்லை: சித்திரை திருவிழா கடந்த ஆண்டைப் போலவே நடைபெறும்: மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!!!

மதுரை: சித்திரை திருவிழா கடந்த ஆண்டைப் போலவே நடைபெறும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுரையின் மகுட விழா என்ற பெருமைக்குரியது சித்திரைத் திருவிழா. சைவ, வைணவ ஒற்றுமை பேசும் விதமாக மதுரை மீனாட்சி கோயில், அழகர்கோவில் விழாக்களை இணைத்து மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இருந்து, சித்திரை மாதம் இவ்விழா நடத்தப்பட்டு வருகிறது. இதற்கும் பல நூற்றாண்டு முன்னதாக மதுரை அருகே தேனூரில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவாகவும், மீனாட்சி கோயிலில் மாசி மாதத்து விழாவாகவும் நடத்தப்பட்டு வந்தது.

கடந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற இருந்தது. அதைதொடர்ந்து அழகர்கோவில் அழகரின் விழா தொடங்கி மே 7ல் வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுவதாக  இருந்தது. சிறப்புமிக்க இந்த விழா, வரலாற்றில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ரத்து செய்யப்பட்டது.

மீனாட்சி அம்மன் திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் சுவாமி சன்னதியில் உள்ள சேத்தி மண்டபத்தில் 3 சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டது. கோவிலுக்குள் பக்தர்கள் இன்றி எதிர்சேவை, அழகர்ஆற்றில் இறங்குதல், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதற்கிடையே, கொரோனா 2ம் அலை காரணமாக தமிழகத்தில் நாளை முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதித்து புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சித்திரை திருவிழா கடந்த ஆண்டைப் போலவே உள்திருவிழாவாகவே நடைபெறும். கோயில் வளாக உட்புறத்தில் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மதுரை ஆட்சியர் அன்பழகன் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி மதுரையில் 21 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள ஸ்டிக்கரை கிழித்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: