வலங்கைமான் தாலுகாவில் கோடை நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

வலங்கைமான்: வலங்கைமான் தாலுகாவில் கோடை சாகுபடியாக நெல் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் உள்ள சுமார் 14 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி கடந்த பருவத்தில் செய்யப்பட்டிருந்தது.பருவம் தவறி பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பெருமளவில் சேதம் அடைந்தன. சுமார் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட நெற்கதிர்களை முற்றிலும் அறுவடை செய்ய இயலாமல் போனது.

இதனால் விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. மேலும் கால்நடைகளுக்கான வைக்கோல் தட்டுப்பாடும் ஏற்பட்டது. காலம் தவறி ஜனவரி மாதம் பெய்த மழையின் காரணமாக நெல் அறுவடைக்குப்பின் கோடை சாகுபடியாக பயறு, உளுந்து சாகுபடி செய்ய இயலாமல் போனதால் விவசாயிகளுக்கு அதன் மூலம் கிடைக்கும் வருவாயும் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு கோடை சாகுபடியாக வலங்கைமான் தாலுகாவில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. பருத்திக்கு உரிய விலை கிடைக்காததை அடுத்து இந்த ஆண்டு பருத்தி சாகுபடி செய்வதில் விவசாயிகள் போதிய ஆர்வம் காட்டவில்லை.

அதனையடுத்து தற்போது கோடை சாகுபடியாக நெல் நடவில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நேரடி விதைப்பு, கை நடவு இயந்திரம் நடவு என சுமார் ஆயிரம் ஹெக்டேரில் நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: