புதுச்சேரியில் மதுபானங்களுக்கான கொரோனா வரி 11 மாதங்களுக்குப் பிறகு நீக்கம்..! பழைய விலை அமல்: காவல்துறை அறிவிப்பு

புதுச்சேரி: மதுபானங்களுக்கான கொரோனா வரி 11 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் நீக்கப்பட்டது. இதனால் தமிழகத்துக்கு இணையாக இருந்த விலை இன்று முதல் குறைந்தது. புதுவையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனோ தொற்று பரவத் தொடங்கிய நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கின் தொடக்கத்தில் மதுபானக் கடைகள், பார்கள் மூடப்பட்டன. 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மதுக்கடைகளைத் திறக்க அரசு அனுமதித்தது. அப்போது, மதுபானங்களுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டது. இவ்வரி முதலில் ஆகஸ்ட் மாதம் வரை அமலில் இருந்தது.

அதையடுத்து நவம்பர் 30 வரை சிறப்பு கலால் வரி என நீட்டிக்கப்பட்டது. இதனால் கொரோனா பரவலைத் தடுக்கலாம் என்ற அடிப்படையில் கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளதாக அப்போதைய ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருந்தார். அதையடுத்து நவம்பர் 29-ம் தேதி கொரோனா வரியை நீக்க அரசுத் தரப்பில் கோப்பு அனுப்பப்பட்டும், அதைக் கிரண்பேடி ஏற்கவில்லை. ஜனவரி 31-ம் தேதி வரை இவ்வரியை நீட்டித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் இரு மாதங்களுக்கு மதுபானங்களுக்கான கொரோனா வரி நீட்டிக்கப்பட்டது.

மார்ச் 31-ம் தேதி அன்று இவ்வரியானது மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படும் எனவும் தேர்தலுக்காக இந்நடைமுறை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கலால்துறை துணை ஆணையர் சுதாகர் பிறப்பித்துள்ள உத்தரவில்; மதுபானங்களுக்கான கொரோனா வரி ஏப்ரல் 7-ம் தேதியுடன் நிறைவடைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ககொரோனா வரியால் புதுவையில் தமிழகத்திற்கு இணையாக உயர்ந்திருந்த மதுபானங்களின் விலை இன்று முதல் குறைந்தது. மீண்டும் முன்பிருந்த நிலைப்படி மதுபானங்களின் விலை புதுச்சேரியில் தமிழகத்தை விடக் குறைவாகவே இருக்கும் என்று கலால் துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: