‘தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும்’ சேலம் திமுக எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ரவுடி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

சேலம்: சேலம் திமுக எம்எல்ஏவுக்கு, அதிமுகவை சேர்ந்த ரவுடி கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சேலம் வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் ராஜேந்திரன். இவர் தற்போது வடக்கு தொகுதியில் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, தொகுதிக்குட்பட்ட கன்னங்குறிச்சி பகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தனர். மேலும், டோக்கன்களையும் விநியோகம் செய்துள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும், அங்கு விரைந்து சென்ற திமுகவினர், டோக்கன் கொடுத்தவர்களை மடக்கிப் பிடித்தனர். இதில் கன்னங்குறிச்சி பகுதியை  சேர்ந்த அதிமுக  ரவுடி ஒருவரும் பிடிபட்டார். அப்போது இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவானது. இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த கன்னங்குறிச்சி போலீசார், அவர்களை விரட்டியடித்தனர்.

இந்தநிலையில், கன்னங்குறிச்சியை சேர்ந்த பிரபல அதிமுக ரவுடி, அதிமுக நிர்வாகிகளிடம் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அந்த ரவுடி, `நான் குண்டாசில் கைதாகாமல் எனது மகனை தொட்டு தூக்கி பிடித்து கொஞ்சுவதற்கு உதவியது அதிமுக தான். இல்லையென்றால் நான் குண்டாசில் கைதாகி இருப்பேன். இதற்காக நான் தீவிரமாக கட்சி பணியாற்றி வருகிறேன். என்னை 10 நாட்களுக்கு பிறகு எங்கே போவாய்? என கேட்கின்றனர். 5 வருடம் ஆனாலும், இங்கேயே தான் இருப்பேன். என்னை தொட முடியாது. இந்த பகுதியில் திமுகவினர் யாரையும் நடமாட விடமாட்டேன். திமுக ஜெயித்தால் இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும்,’’ என பேசுகிறார். அப்போது, அருகில் இருக்கும் அதிமுக நிர்வாகி ஒருவர், அப்படியானால் யாரை போடப்போகிறாய் என்று கேட்கிறார். இவ்வாறு அந்த வீடியோ முடிவடைகிறது.

தற்போது இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம், வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக திமுகவினர் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் கூறுகையில், ‘‘எனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து தேர்தல் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது,’ என்றார்.

Related Stories: