கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் அரசின் பதிலுக்கு காத்திருப்பு தமிழக கோயில்களில் சித்திரை திருவிழா ஏற்பாடுகளை செய்யலாமா, வேண்டாமா?

* அறநிலையத்துறை தலைமை மவுனம்

* அதிகாரிகள் குழப்பம்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கோயில்களுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுதல், மாஸ்க் அணிதல், கைகளை தூய்மையாக வைத்திருத்தல் போன்ற அரசினால் வகுக்கப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதிப்படுத்தவும், இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து மீண்டும் கோயில்களின் நுழைவு வாயிலில் கைகளை கழுவ சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது. கோயில்களுக்கு வரும் பக்தர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு பிரதான அம்பாள் மற்றும் சுவாமி அமைந்துள்ள சன்னதிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை. வெளி பிரகார சன்னதிகளில் அனுமதிக்கப்படுகின்றனர். கோயில் நடையை சாத்திய பிறகு கிருமி நாசினி தெளித்து கோயில்கள் சுத்தம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், தற்போது, மாநிலம் உள்ள கோயில்களில் சித்திரை திருவிழா கொண்டாடப்படவிருக்கிறது. இதனால், கோயில்களுக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, இக்கோயில்களில் விழா நடத்துவது தொடர்பாக தமிழக அரசின் அறிவுரைக்காக காத்திருக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சித்திரை 1ம் தேதி பல கோயில்களில் திருவிழா நடக்கிறது.

இதற்காக, நேற்றுமுன்தினம் கோயில்களில் கொடியேற்றப்பட்டன. வரும் 1ம் தேதி சித்திரை திருவிழாவுக்கு முன்னதாக பல கோயில்களில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதற்கான ஏற்பாடுகளை தற்போதே கோயில் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். ஆனால், தமிழக அரசு சார்பில் தற்போது வரை உரிய பதில் வரவில்லை. இதனால், கோயில்களில் சித்திரை திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யலாமா, வேண்டாமா என்பது தெரியாமல் கோயில் அலுவலர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

Related Stories: