காலை முதல் விறுவிறுப்பு தேனி மாவட்டத்தில் வெயிலிலும் ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்

தேனி : தேனி மாவட்டத்தில்  நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கிய நிலையில், மாலை 7 மணி வரை சதவீத வாக்குகள் பதிவானது. தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

நான்கு தொகுதிகளில் 5 லட்சத்து 51 ஆயிரத்து 994 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 73 ஆயிரத்து 446 பெண் வாக்காளர்கள், 198 இதர வாக்காளர்கள் என மொத்தம் 11 லட்சத்து 25 ஆயிரத்து 638 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 1561 வாக்குச்சாடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 2 ஆயிரத்து 739 ஆண் அலுவலர்கள், 4 ஆயிரத்து 753 பெண் அலுவலர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 492 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த வாக்குச்சாவடி மையங்கள் 155 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 155 மண்டல அலுவலர்கள், 155 உதவி மண்டல அலுவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை:

வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும் வாக்காளர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 3 ஆயிரத்து 122 தன்னார்வ தொண்டர்கள் நியமிக்கப்பட்டு வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு உடல் வெப்பநிலை அறிதல், கைகளில் கிருமி நாசினி தெளித்தல், சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இப்பணிகளை கண்காணிக்க 88 சுகாதார ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.  

நேற்று காலை 6 மணிக்கு தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 1,561 வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதனையடுத்து, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 7 மணிக்கு முடிவடைந்தது. மாவட்டம் முழுவதும் சதவீதம் வாக்குப்பதிவானது.

தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேனி கலெக்டர் அலுவலகம் அருகே வடபுதுப்பட்டியில் உள்ள இந்து முத்தாலம்மன் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். தேர்தலையொட்டி தேனியில் பரபரப்பாக உள்ள மதுரை சாலை, பெரியகுளம் சாலை, கம்பம் சாலையில் உள்ள கடைகள் பெரும்பாலானவை அடைக்கப்பட்டன. இதனால், இச்சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.  இதேபோல மாவட்டத்தின் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் உணவுப்பொருள்கள் கிடைக்காமல் அவதியுற்றனர்.

மாலை 3 மணி நேர நிலவரம்: தேனி  மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் நேற்று மாலை 3 மணி  நிலவரப்படி மொத்தமுள்ள 11 லட்சத்து 25 ஆயிரத்து 638 வாக்காளர்களில் 6  லட்சத்து 14 ஆயிரத்து 260 வாக்குகள் பதிவானது. இது 54.74 சதவீதமாகும்.

தொகுதி  வாரியாக 9 மணி நிலவரப்படி ஆண்டிபட்டி தொகுதியில் 10.07 சதவீதமும்,  பெரியகுளம் தொகுதியில் 7.74 சதவீதமும், போடித் தொகுதியில் மிக மந்தமாக 3.65  சதவீதமும், கம்பம் தொகுதியில் 12.01 சதவீதமும் வாக்குப்பதிவு நடந்தது.   காலை 11 மணி நிலவரப்படி ஆண்டிபட்டி தொகுதியில் 26.40 சதவீதமும், பெரியகுளம்  தொகுதியில் 20.22 சதவீதமும், போடித் தொகுதியில் 21.34 சதவீதமும், கம்பம்  தொகுதியில் 28.12 சதவீதமும்வாக்குப்பதிவு நடந்தது. மதியம் 1 மணி நிலவரப்படி  ஆண்டிபட்டி தொகுதியில் 44.09 சதவீதமும், பெரியகுளம் தொகுதியில் 44.97  சதவீதமும், போடித் தொகுதியில் 33.17 சதவீதமும், கம்பம் தொகுதியில் 44.96  சதவீதமும் வாக்குப்பதிவு நடந்தது. மாலை 5 மணி நேர நிலவரப்படி ஆண்டிபட்டி தொகுதியில் 69.37 சதவீதம், பெரியகுளம் தொகுதியில் 63.29 சதவீதம், போடித் தொகுதியில் 62.51 சதவீதம், கம்பம்  தொகுதியில் 65.22 சதவீதம் என வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் சராசரியாக 65.09  சதவீத வாக்குப்பதிவு நடந்தது. இதன்படி, மொத்தமுள்ள 11 லட்சத்து 25 ஆயிரத்து 638 வாக்காளர்களில் 7 லட்சத்து 32 ஆயிரத்து 762 பேர் வாக்களித்துள்ளனர்

Related Stories: