பாஜவினர் ஓட்டுக்கு பணம் வழங்க டோக்கன் காங். வேட்பாளர் ‘திடீர்’ மறியல்: தேர்தல் அதிகாரியிடம் கமல் புகார்

கோவை: கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும், பாஜ வேட்பாளராக வானதி சீனிவாசனும், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கமல்ஹாசனும் போட்டியிடுகின்றனர். நேற்று காலை ராமநாதபுரத்தில் உள்ள பள்ளியில் மயூரா ஜெயக்குமார் தனது வாக்கை பதிவு செய்தார். இந்நிலையில், வைசியாள் வீதி பகுதியில் உள்ள வீடுகளில் பாஜவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க டோக்கன் கொடுத்து தாமரைக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதையறிந்த காங்கிரசார் டோக்கன் கொடுத்த பாஜவினரை கையும், களவுமாக பிடித்தனர். தகவலறிந்து காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் வகாப் ஆகியோர் அங்கு சென்றனர்.

பணம் வழங்க டோக்கன் கொடுத்து கொண்டிருந்தது தொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். இது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தனது ஆதரவாளர்களுடன் வைசியாள் வீதி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது அவர் பாஜவினர் கொடுத்த டோக்கனை கையில் வைத்திருந்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.கமல் புகார்: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் ம.நீ.ம. கட்சி தலைவர் கமல் சென்னையில் வாக்களித்துவிட்டு விமானத்தில் கோவைக்கு வந்தார். அவருடன் அவரது மகள் நடிகை ஸ்ருதிஹாசனும் வந்திருந்தார். இருவரும் வாக்குப்பதிவு மையங்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.

கெம்பட்டி காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்ட பின் கமல் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கோவையில் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே பணம் பட்டுவாடா மும்முரமாக நடைபெற்று வருகிறது என்றார். இதனைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சி மத்திய மண்டல தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்ரமணியனிடம் புகார் அளித்தார்.

Related Stories: