அசாம் வாக்குப்பதிவில் தில்லுமுல்லு..! மொத்த வாக்காளர்கள் 90 பேர், பதிவானது 181: மிரட்டலுக்கு பயந்த 5 பணியாளர்கள் சஸ்பெண்ட்

கவுகாத்தி: அசாமில் 90 வாக்காளர்கள் மட்டுமே உள்ள வாக்குச் சாவடியில் 181 வாக்குகள் பதிவானது தொடர்பான விவகாரத்தில் 5 தேர்தல் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அசாமில் இன்று 3ம் கட்ட மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் கடந்த 1ம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலின் போது, ஹப்லாங் தொகுதியில் உள்ள ஒரு கிராமப்புற வாக்குச்சாவடியில் 90 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அந்த வாக்குச்சாவடிக்கான வாக்காளர் பட்டியலிலும் 90 பெயர்கள் மட்டுமே இருந்தன. ஆனால், அந்த வாக்குச்சாவடியில் இருந்து வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 181 வாக்குகள் பதிவாகி உள்ளது.

இதனை தணிக்கை செய்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், அந்த வாக்குச்சாவடியில் பணியாற்றிய 5 தேர்தல் பணியாளர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். விசாரணையில், அந்த கிராமத் தலைவர் என்று கூறப்படும் நபர், தேர்தல் பணியாளர்கள் வைத்திருந்த வாக்காளர் பட்டியலை நிராகரித்துவிட்டு, தான் கொண்டு வந்த வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரையும் வாக்களிக்க வைத்ததாக தெரியவந்துள்ளது.

மேலும், அந்த வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் போலீசார் யாரும் இல்லாத காரணத்தால், அங்கு பணியாற்றிய தேர்தல் பணியாளர்கள், கிராம தலைவரிடம் இருந்து வந்த மிரட்டலால் அவர் அளித்த வாக்காளர் பட்டியலின்படி மக்களை வாக்களிக்க அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் உள்ளபடி அந்த வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related Stories: