சூறைக்காற்றுடன் மழையின் போது மின்கம்பி அறுந்து விழுந்து 22 ஆடுகள் பலி-பரமத்திவேலூர் அருகே சோகம்

பரமத்திவேலூர் : பரமத்திவேலூர் அடுத்த கோனூர் மேற்கு தோட்டம் பகுதியில், நேற்று மாலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்தபோது, மின்கம்பி அறுந்து பட்டி மீது  விழுந்ததில், 22 ஆடுகள் உயிரிழந்தன. பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நேற்று மாலை சுமார் 5 மணியளவில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சுழற்றி அடித்த சூறைக்காற்றுக்கு பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.

மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. மரக்கிளைகள் விழுந்ததில் வீடுகள் சேதமடைந்தது. இந்நிலையில் கோனூர் அடுத்த மேற்கு தோட்டம் பகுதியில் சூறைக்காற்றுக்கு மின்கம்பி அறுந்து, அருகில் இருந்த விவசாயி மணிவேலின்  கொட்டகையின் மீது விழுந்தது. முன்னதாக பெய்த மழையால் பட்டிக்குள் மழைநீர் தேங்கியிருந்தது.

இதில் மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து பட்டியில் கட்டப்பட்டிருந்த  22 ஆடுகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானது. சத்தம் கேட்டுவந்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மின்சாரத்தை துண்டித்தனர். சூறைக்காற்றுக்கு மின்கம்பி அறுந்து விழுந்து, பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 22 ஆடுகள் பலியான சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராசிபுரம்: ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று காலை குருசாமிபாளையத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் கந்தசாமி என்பவரது தோட்டத்தில் சாகுபடி செய்திருந்த 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தது. குலைதள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சேதமடைந்ததால், சுமார் ₹2 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கந்தசாமி வேதனை தெரிவித்தார். மேலும், ராசிபுரம் -திருச்செங்கோடு சாலையில் மரம் முறிந்து விழுந்ததால், சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதி மக்களே மரத்தை அப்புறப்படுத்தினர். இதையடுத்து போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

Related Stories: