செடிகளில் இலைப்பேன் தாக்குதல் அதிகரிப்பு ஓசூரில் ரோஜா மலர் உற்பத்தி கடும் பாதிப்பு-விவசாயிகள் வேதனை

ஓசூர் : ஓசூர் சுற்றுவட்டாரத்தில் செடிகளில் இலை பேன் தாக்குதல் அதிகரித்துள்ளதால், ரோஜா மலர் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மண்வளம், சீரான தட்பவெப்ப நிலையை கொண்டுள்ளதால், இங்குள்ள விவசாயிகள் அதிக அளவில் ரோஜா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 பசுமை குடில் மற்றும் திறந்தவெளி மூலம், சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் ரோஜா  சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாஜ்மஹால், நொப்ளஸ், பர்ஸ்ட்ரெட், கிரான்ட்காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட வகையான ரோஜா பூக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தின கொண்டாட்டங்களுக்காக மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு, ஓசூரில் இருந்து ரோஜா பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக காதலர் தினத்திற்கு மட்டும், ஆண்டுக்கு ஒரு கோடி மலர்கள், ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள ரோஜா செடியில் இலை பேன் தாக்குதல் அதிகரித்து, பூக்களின் உற்பத்தி குறைந்துள்ளது.  இதுகுறித்து ரோஜா சாகுபடி செய்துள்ள விவசாயி ஹரீஷ் கூறியதாவது: ரோஜா செடிகளின் இலைகளில் வெள்ளை நிற பூஞ்சான் உருவாகி, பேன்கள் அதிகரித்துள்ளது. இதனால் தரமான பூக்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம், காதலர் தின கொண்டாட்டங்களுக்காக வெளிநாட்டு ஆர்டர்கள் வரவில்லை.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவிலும் கோயில் திருவிழாக்கள், தேர் மற்றும் தெப்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. இதனால் தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் 2 ஆயிரம் விவசாயிகள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ரோஜா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது ரோஜா செடிகளில் இலை பேன் தாக்கியுள்ளதால், செடிகளில் உள்ள இலைகள் காய்ந்து, வளர்ச்சி தடைபடுகிறது. மெட்டுக்கள் முழு வளர்ச்சியடைவது இல்லை.

இதழ்களும் நோய் தாக்குதலுக்கு ஆளாவதால், தரமான பூக்கள் விளைவது இல்லை. இதனால் பூக்களுக்கு உரிய விலை கிடைக்காது. வேளாண் மற்றும்  தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், இலை பேன் தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்வாறு அவர் தெரவித்தார்.

Related Stories: