தமிழகத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

* கடைசி நாளில் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

* மு.க.ஸ்டாலின், உதயநிதி சென்னையில் ஓட்டுவேட்டை

* எடப்பாடி, ஓபிஎஸ் சொந்த ஊரில் பிரசாரம்

*  நாளை காலை 7 முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு

சென்னை: தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று இரவு 7 மணியுடன் ஓய்ந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் கமல், சீமான், டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை நடத்தினர். பிரசாரம் முடிந்ததையடுத்து வீடு வீடாக சென்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் இருந்தால் அவர்களை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரம் கொண்டு செல்லும் பணி தீவிரமடைந்துள்ளது.

 தமிழகத்தில் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த பிப்ரவரி 26ம் தேதி அறிவித்தார். அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி(நாளை) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெற்றது. மார்ச் 22ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் 3,998 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 3,585 ஆண் வேட்பாளர், பெண் வேட்பாளர்கள் 411 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் இருவரும் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் திமுக தலைமையிலான ஒரு அணியும், அதிமுக தலைமையிலான ஒரு அணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மைய்யம், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். ஆனால், திமுக கூட்டணி-அதிமுக கூட்டணி இடையேதான் நேரடி போட்டி நிலவியுள்ளது.

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் சூறாவளி பிரசாரம் செய்து வந்தார். காலை 7 மணிக்கு தொடங்கினால் இரவு 10 மணி வரை இடைவிடாது பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் பிரசாரம் செல்லும் இடங்களில் எல்லாம் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் அவரின் பேச்சை காண்பதற்காகவும் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அந்த அளவுக்கு மு.க.ஸ்டாலின் பிரசாரம் அனல் பறந்தது. பிரசாரத்தின் போது நடந்து சென்று அனைத்து தரப்பு மக்களிடம் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கைகுலுக்கி ஆதரவு கேட்டார். நிறைய பேர் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர். அவரின் அனல் பறந்த பிரசாரம் சென்னையில் நேற்று நிறைவு பெற்றது. இறுதிநாளான நேற்று காலை அவர் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து பிரசாரம் செய்தார். தொடர்ந்து துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பி.கே.சேகர்பாபு, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் எபினேசர், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் ஆர்.டி.சேகர், மாதரவம் தொகுதியில் போட்டியிடும் மாதவரம் சுதர்சனம், அண்ணா நகர் தொகுதியில் போட்டியிடும் எம்.கே.மோகன், வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் அ.வெற்றி அழகன், எழும்பூர் தொகுதி வேட்பாளர் இ.பரந்தாமன், திரு.வி.க.நகர் தொகுதியில் போட்டியிடும் தாயகம் கவி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

 தொடர்ந்து மாலையில் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வீடுவீடாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து பெரவள்ளூர் சதுக்கம், அகரத்தில் வாக்காளர் மத்தியில் சிறப்புரையாற்றினார். அங்கேயே தனது தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தார். மேலும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வைகோ, பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் எம்பி உள்ளிட்ட பலரும் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தனர்.  அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள், முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமதாஸ், அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரும் பிரசாரம் செய்தனர். தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் போட்டியிடும் இடைப்பாடி தொகுதியில் தனது பிரசாரத்தை நேற்றிரவு நிறைவு செய்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தான் போட்டியிடும் போடிநாயக்கனூரில் பிரசாரத்தை முடித்து கொண்டார்.

 இதேபோல டி.டி.வி. தினகரன் கோவில்பட்டியிலும், கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியிலும், சீமான் திருவொற்றியூர் தொகுதியிலும் பிரசாரத்தை நிறைவு செய்தனர். தலைவர்கள் தொகுதியில் முற்றுகையிட்டதால் தேர்தல் களம் அனல் பறந்தது. அதுமட்டுமல்லாமல் வேட்பாளர்களும் வீடுவீடாக சென்று கடைசிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால், தமிழகம் முழுவதும் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. தலைவர்கள், வேட்பாளர்களின் பிரசாரம் இரவு 7 மணியுடன் ஒய்ந்தது. மேலும் அவர்கள் அதற்கு ேமல் வாக்கு கேட்கவும் தடை விதிக்கப்பட்டது. தேர்தல் பிரசாரம் ஒய்ந்ததையடுத்து தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் வெளியேற போலீசார் உத்தரவிட்டனர். உத்தரவை மீறி தங்கியிருந்தால் அவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.  வெளியாட்கள் தங்கியிருக்கிறார்களா என்று தங்கும் விடுதிகள், கல்யாண மண்டபங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது.  பிரசாரம் ஓய்ந்ததையடுத்து நாளை தமிழகத்தில் 234 தொகுதியிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை இடைவிடாமல் நடைபெறுகிறது.  அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை வாக்குப்பதிவு தொடங்குவதையடுத்து, இன்று காலை முதல் தமிழகத்தில் மொத்தமுள்ள 88,937 வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் துணை ராணுவத்தினர் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் அசம்பாவித சம்வங்களை தடுக்கும் வகையில் துணை ராணுவத்தினர், போலீசார் ரோந்து சுற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர். அது மட்டுமல்லாமல் 300 கம்ெபனி துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை மாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்படும். பின்னர் துப்பாக்கி போலீஸ்  பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் இடத்தில் உள்ள ஸ்ட்ராங்க் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்படும். மே மாதம் 2ம் தேதி காலை 8  மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

6.29 கோடி வாக்காளர்கள்

தமிழகத்தில் மொத்தமாக 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3 கோடியே 92 லட்சத்து 3 ஆயிரத்து 651 பேர் உள்ளனர். பெண்கள் 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7 ஆயிரத்து 192 பேரும் உள்ளனர். இந்த சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்ககூடியவர் 13 லட்சத்து 83 ஆயிரத்து 610 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பணியில் 4.75 லட்சம் பேர்

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்காக ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 55 ஆயிரத்து 102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவற்றுடன் 1 லட்சத்து 14,205 கட்டுப்பாட்டு இயந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய 1 லட்சத்து 20 ஆயிரத்து 807 விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இதுதவிர, 20 சதவீதம் மின்னணு இயந்திரங்கள் கூடுதலாக வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் என சுமார் 4 லட்சத்து 75 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர். சுமார் 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுகள் அனைத்தும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் 12 ஆயிரம் கி.மீ. பயணம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலத்தின் 30 தொகுதிகளிலும் மொத்தம் 21 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் 70 கூட்டங்களில் பேசி இருக்கிறார். 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்திருக்கிறார். அவர் போகிற இடங்களில் எல்லாம் தினமும்-ஒவ்வொரு ஊரிலும் பல்லாயிரக்கணக்கான மக்களைப் அவர் பார்த்துள்ளார். அவர்களிடம் குறைகளை கேட்டிருக்கிறார். மேலும் அவர்களுடன் சகஜமாக பேசி செல்பியும் எடுத்து கொண்டார். மொத்தத்தில் அவர் ஒரு தலைவர் என்பதை மறந்து அந்த அளவுக்கு அவர்களுடன் பழகியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Related Stories: