ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம்

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வண்ணாரப்பேட்டை பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மக்கள் மத்தியில் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ‘ராயபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தற்போது குறைந்து உள்ளது. அதற்கு காரணம் தங்கசாலை மேம்பாலம், ஸ்டான்லி சுரங்கப்பாலம், என பல பாலங்கள் அமைக்கப்பட்டது தான். மீனவர் நலனை பொறுத்தவரை, இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு வசதிகள் செய்து கொடுத்துள்ளேன். காசிமேட்டில் மீன் விற்பனை செய்பவர்கள் மழையிலும், வெயிலிலும் சிரமப்படுவதை தடுக்க சமீபத்தில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சர்வதேச தரத்தில் மீன் அங்காடி கட்டி கொடுத்துள்ளேன்.

தற்போது ரூ.155 கோடி செலவில் மீன்பிடி துறைமுகத்தில் மேலும் பல்வேறு வசதிகள் செய்து கொடுப்பதற்கு மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் மீன்பிடி துறைமுகத்தில் மேலும் 200 முதல் 300 மீன்பிடி படகுகள் நிறுத்த முடியும். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் உயரும். அதேபோல், மீனவர் நலவாரியம் மூலம் கடந்த ஆண்டு ஒவ்வொரு மீனவ குடும்பத்திற்கும் ரூ.1,000 வீதம் 3 முறை மொத்தம் ரூ.3,000 வழங்கப்பட்டுள்ளது. எனவே, தொடர்ந்து தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த அதிமுகவிற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,’ என்றார். கூட்டணி கட்சியினர் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Related Stories: