நாட்றம்பள்ளி அருகே பரபரப்பு தேங்காய் நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளி அருகே நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேலும், தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.  திருப்பத்தூர் மாவட்டம்,  நாட்றம்பள்ளி தாலுகா, அக்ராகரம் ஊராட்சிக்குட்பட்ட குடியன்வட்டம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சாமண்ணன்(35). இவர் அதேபகுதியில் தேங்காய் நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில், தொழிற்சாலையில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து அங்குள்ள தேங்காய் நார்களில் தீ பற்றி எரிந்தது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால், தீ மளமளவென பரவியது. இதற்கிடையே நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து, வந்த நாட்றம்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் உடனடியாக தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்து அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர். ஆனால், தீயில் தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான மின் மோட்டார், ஜெனரேட்டர் மற்றும் ஏற்றுமதி செய்ய வைத்திருந்த நார் உள்ளிட்டவை முழுவதுமாக தீயில் எரிந்து நாசமானது.

தீவிபத்து குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டரில் தண்ணீர் எடுத்து வந்த அவலம்: நாட்றம்பள்ளி அடுத்த குடியன்வட்டம் பகுதியில் உள்ள நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க நாட்றம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் வாகனத்துடன் வந்தனர். அப்போது, தீயை அணைக்கும் போது தண்ணீர் போதிய அளவிற்கு வாகனத்தில் இல்லாததால், தீயணைப்பு வீரர்கள் அருகில் உள்ள பகுதிக்கு சென்று டிராக்டரில் தண்ணீர் கொண்டு வந்து தீயை பொதுமக்கள் உதவியுடன் அணைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: