அனைத்து தரப்பினரின் அதிருப்தியை பெற்று இருக்கிற அதிமுக அரசை மக்கள் தூக்கியெறிய தயாராக உள்ளனர்: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

* திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தினமும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறீர்கள். மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது?

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறேன். செல்லும் இடங்கள் எல்லாம் பொதுமக்களிடம் எழுச்சி மிகுந்த வரவேற்பை பார்க்க முடிகிறது. இந்த தேர்தலில் அமைதியான ஒரு அலை வீசுகிறது. மு.க.ஸ்டாலின் அலை என்று சொல்லலாம். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றி பெறும். கருத்துக்கணிப்புகள் கூறுவது போல் திமுக கூட்டணி 180க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

* திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை குறி வைத்து ரெய்டு நடத்தப்படுகிறதே?

திமுக கூட்டணி கட்சி மற்றும் அதன் வேட்பாளர்களை குறி வைத்து ஐடி ரெய்டு நடத்துவது பழி வாங்கும் நடவடிக்கை. திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கிற நிலையில், எரிச்சல் அடைந்த அதிமுக -பாஜ அரசுகள் இம்மாதிரியான நெருக்கடிகளை செயல்படுத்துகிறது. அச்சுறுத்தல்களை உருவாக்குகிறது. இதற்கு திமுகவோ, கூட்டணி கட்சிகளோ பயந்து ஒரு போதும் பின்வாங்காது. மக்களும் இதை கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதிமுக-பாஜ கூட்டணிக்கு மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள்.

* தேர்தல் ஆணையம் செயல்பாடு எப்படி இருக்கிறது?

தேர்தல் ஆணையம் ஆளும் கட்சி கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய ஒரு அமைப்பு. ஒரு நிறுவனம். அவர்கள் தேர்தலை நடத்துகிற வேலையை மட்டுமே செய்கிறார்களே தவிர, அதை நேர்மையாக நடத்துவதற்கு உரிய அதிகாரத்தை பெற்றிருக்கவில்லை. ஆளும் கட்சியினர் என்ன ேவண்டுமென்றாலும் செய்யலாம். அதை வேடிக்கை பார்க்கலாம் என்ற நிலை தான் தேர்தல் ஆணையத்தின் வேலையாக உள்ளது. ஆகவே தேர்தல் ஆணையத்தை நடுநிலையான நிறுவனமாக பார்க்க முடியவில்லை.

* அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு கால செயல்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?

10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியை மக்கள் பார்த்து விட்டார்கள். ஏராளமான அவலங்களை சந்தித்து விட்டார்கள். 10 ஆண்டுகள் போதும் என்கிற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் ஊழல் செய்த பணத்தில் இருந்து ஓட்டுக்கு காசு கொடுத்தாலும், அதை மக்கள் பொருட்படுத்தப்போவதில்லை. அதையெல்லாம் தாண்டி திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க உள்ளார்கள்.

*  அதிமுக அரசு மீது மக்களுக்கு இவ்வளவு வெறுப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம்?

கடந்த 5 ஆண்டுகால ஆட்சி என்பது மோடி தலைமையிலான பினாமி ஆட்சியாகத்தான் தமிழகத்தில் நடந்தது. அடி முதல் நுனி வரை ஊழல் தலைவிரித்தாடியது. எல்லா திட்டங்களிலும் மிக வெளிப்படையாக கமிஷன் என்பது அதிமுகவினால் வாங்கப்பட்டது என்பதை மக்கள் அறிந்து தான் வைத்திருக்கிறார்கள். மணல் கொள்ளை உள்ளிட்ட இயற்கை வளங்கள் அதிமுக ஆட்சியில் சுரண்டப்பட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆணவக்கொலைகள் அதிகரித்து இருக்கின்றன. நீட் நுழைவுத்தேர்வை இவர்களால் தடுக்க முடியவில்லை. நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. 7 தமிழரை விடுவிக்க முடியவில்லை. ஈழத்தமிழரை பாதுகாக்க முடியவில்லை. தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்படுகின்றனர், கைது செய்யப்படுகின்றனர். அதையும் அதிமுகவால் பாதுகாக்க முடியவில்லை.

தமிழக அரசுக்கு தெரியாமல் ஏராளமான துணை வேந்தர்களை நியமிப்பதை நாம் பார்க்கிறோம். அதன் மூலம் மாநில உரிமைகள் பறிபோய் இருக்கிறது. வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக இவர்கள் வாக்களித்து இருக்கிறார்கள். அதனால் விவசாயிகள் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். ெதாழிலாளர் விரோத சட்டங்களுக்கு ஆதரவளித்து இருக்கிறார்கள். அதனால், தொழிலாளர் வர்க்கமும் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை இந்த அரசு புறந்தள்ளி இருக்கிறது. அவர்களுக்கான ஊதியம் தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தவில்லை. இப்படி அனைத்து தரப்பினரின் அதிருப்தியை பெற்று இருக்கிற ஒரு அரசாக அதிமுக அரசு திகழ்கிறது. எனவே, மக்கள் இந்த அரசை தூக்கி எறிவதற்கு தயாராக இருக்கிறார்கள்.

* பிரதமர் மோடி, அமித்ஷா படங்களை பயன்படுத்த பாஜ வேட்பாளர்களே தயங்குகிறார்களே?

பாஜ வேட்பாளர்களே மோடியின் பெயரையோ, படத்தையோ பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என்றால் தமிழகத்தில் எந்த அளவுக்கு மோடி மீதான மதிப்பு இருக்கிறது என்பதை இதில் இருந்து ெதரிந்து கொள்ளலாம். பாஜவினரே மோடி படத்தை அமித்ஷா படத்தை போடாமல் ஓட்டு கேட்கும் அளவுக்கு தமிழக மக்கள் மோடியையும், அமித்ஷாவையும் புரிந்து வைத்திருக்கிறார்கள். பாஜவினர் அரசியலையும் புரிந்து வைத்து இருக்கிறார்கள். இந்த பிரச்சாரத்தில் அவர்கள் உறுதிப்படுத்துகிற உண்மையாகவும் இருக்கிறது. பிரச்சாரத்தில் மோடி, அமித்ஷா படம் போடாமல் இருப்பதன் மூலம் மக்கள் எந்த அளவுக்கு புறந்தள்ளுகிறார்கள் என்பதை அவர்களது நடவடிக்கையே உறுதிப்படுத்துகிறது.

* அதிமுக-பாஜ-பாமக கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள்?

அதிமுகவுக்கும்-பாஜவுக்கு இடையே உணர்வுப்பூர்வமான, கொள்கை அடிப்படையிலான கூட்டணி இல்லை. பாஜவின் அச்சுறுத்தலுக்கு இலக்காகி, வேறுவழியில்லாத நிலையில், அதை தூக்கி சுமக்க கூடிய நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. அதிமுகவுக்கும்-பாஜவுக்கு இடையேயான கூட்டணி அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள கூட்டணி. அதிமுக-பாமகவுக்கு இடையேயான கூட்டணி பேரத்தால் படிந்த கூட்டணி. அந்த கூட்டணி ஒரு சந்தர்ப்பாவத கூட்டணி. சமூக நீதிக்கு எதிரான கூட்டணி.

*  இந்த தேர்தலுக்கு பிறகு அதிமுக நிலைமை என்னவாக இருக்கும்?

இந்த தேர்தலில் அதிமுக முற்றாக களைந்து போகும். பாஜவோடு அது இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பாஜவும் அதை ஒரு செயல் திட்டமாக வரையறுத்து தான் செயல்படுகிறது. திமுகவை வீழ்த்த முடியாது. ஆகவே, இந்த தேர்தலில் அதிமுகவோடு தன்னை இணைத்து கொண்டு, கரைத்து விட்டு இரண்டாவது பெரிய கட்சியாக தமிழகத்தில் வர வேண்டும். வளர வேண்டும் என்று பாஜ விரும்புகிறது. அது தான் அவர்களின் கனவு திட்டம். ஆகவே தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சி இருக்குமா என்பதே கேள்விக்குறியாகும்.

Related Stories: