ஜம்முவில் 62 ஏக்கரில் ஏழுமலையான் கோயில்: 10 குத்தகைக்கு நிலம் ஒதுக்கீடு

திருமலை: ஜம்மு காஷ்மீரில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக 62 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, பல்வேறு மாநிலங்களில் ஏழுமலையான் கோயிலை தேவஸ்தானம் கட்டி வருகிறது. அதன்படி, ஜம்முவில் உள்ள மஜின் பகுதியில்  வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக அனுமதி கேட்டு மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கோயில் கட்டுவதற்காக தேவஸ்தானத்திற்கு  62 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கான நகல் நேற்று முன்தினம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்தது. அந்த உத்தரவில், ‘ஜம்மு மாவட்டம், மஜின் கிராமத்தில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்ட, ஜம்மு-காஷ்மீர் அரசு நில ஒதுக்கீட்டுச் சட்டம் 1960ன் படி, பெயரளவில் ஒரு ஏக்கர் நிலம் ₹10க்கு குத்தகையாக 40 ஆண்டுகளுக்கு 62 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

டிக்கெட், தங்கும் அறைக்கு ஒரே நேரத்தில் முன்பதிவு

திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கொரோனா  பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், திருப்பதி வைகுண்டம் வளாகத்தில் முகக்கவசம் இல்லாத பக்தர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும். ஆன்லைனில் முன்கூட்டியே அறைகளை முன்பதிவு செய்யும் பக்தர்கள், முதலில் சிஆர்ஓ அலுவலகத்திற்கும், அங்கிருந்து அறை விசாரணை அலுவலகத்திற்கும் சென்று அறைகளைப் பெற்று வருகின்றனர். இனி, அவ்வாறு இல்லாமல் திருப்பதியில் உள்ள துணை விசாரணை அலுவலகத்திற்கு சென்று அறைகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த நடைமுறை அடுத்த 10 நாட்களில் கொண்டு வரப்படும். இதனால், ₹300 சிறப்பு நுழைவுத் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் உடனடியாக ஒரே நேரத்தில் அறைகளையும் முன்பதிவு செய்யலாம்,’’ என்றார்.

Related Stories: