தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும்: இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை

சென்னை: தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, 2.07 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 ரொக்க தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்க 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி 336 மாணவர்கள் மருத்துவ படிப்பிலும் 99 மாணவர்கள் பல் மருத்துவ படிப்பிலும் சேர்ந்துள்ளனர்.

 32 லட்சம் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.2,247 கோடி வழங்கப்பட்டது. நிவர், புரெவி புயல் மற்றும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட 17.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,717 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.3,00,501 கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 10.50 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசலில், 1,102 ஏக்கரில் சர்வதேச தரத்தில் ரூ.1,203 கோடியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.380 கோடியில் கண்ணன் கோட்டை மற்றும் தேர்வாய்க் கண்டிகை நீர்தேக்கம் திட்டம் துவக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Related Stories: