கேரளாவில் பரபரப்பு: காங்கிரஸ் இளம் பெண் வேட்பாளர் வீட்டு ஜன்னல் கண்ணாடி உடைப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அரிதா பாபு. அவரை ஆதரித்து கடந்த 30ம் தேதி பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று அரிதா பாபு வீட்டில் அனைவரும் தேர்தல் பிரசாரத்துக்கு சென்று விட்டனர். இந்த நேரத்தில் வீட்டை ஒருவர் வீடியோ எடுத்து நேரலையாக பேஸ்-புக்கில் ஒளிபரப்பி வந்தார். அரிதா பாபு ஏழை அல்ல. அவரது பெரிய வீட்டை பாருங்கள். அவர்களிடம் கார் உள்ளது. தற்போது வேறு இடத்தில் நிறுத்தி உள்ளனர். தேர்தல் லாபத்துக்காக ஏழைகளாக காட்டிக்கொள்கின்றனர். வாக்காளர்கள் இதை நம்ப வேண்டாம் என்று நேரலை வீடியோவில் பேசியுள்ளார். இதை அறிந்த அரிதா பாபுவின் சகோதரர் அருண் உடனே வீட்டுக்கு விரைந்து வந்தார்.

அப்போது வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி கிடந்தன. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர் காயங்குளம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். விசாரணையில் வீட்டை வீடியோ எடுத்தது அந்த பகுதியை சேர்ந்த டிஒய்எப்ஐ தொண்டர் சலீம் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் எம்பி கூறுகையில், அரிதா பாபுவின் செல்வாக்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தொகுதியில் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. இதை பொறுக்க முடியாமல் மார்க்சிஸ்ட் கட்சியினர், அரிதா பாபுவின் வீட்டை அடித்து நொறுக்கி உள்ளனர். இதற்கு மார்க்சிஸ்ட் கட்சியினர்தான் காரணம் என்றார்.

Related Stories: