கடைசி நேர பட்டுவாடாவுக்கு பதுக்கல் அதிமுக நிர்வாகி வீட்டில் ரூ.2.17 கோடி சிக்கியது: ஆண்டிபட்டி அருகே பரபரப்பு

மதுரை: ஆண்டிபட்டி அருகே அதிமுக நிர்வாகி வீட்டில், வாக்காளர்களுக்கு கடைசி நேர பட்டுவாடா செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.17 கோடி பணத்தை வருமான வரித்துறையினர் நேற்றிரவு பறிமுதல் செய்தனர்.  இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலில் அதிமுக, பாஜ கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதனால் கலக்கத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகள், தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு, அதிகாரிகளின் துணையுடன் பணம் விநியோகம் செய்து வருகின்றனர். சமீபத்தில் டெல்டா மாவட்டத்தில் அதிமுகவினரிடம் ரூ.2 கோடி சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் ரூ.2.17 கோடி பணம் சிக்கியது. அதன் விபரம் வருமாறு:

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வெள்ளையத்தேவன்பட்டியை சேர்ந்தவர் அமரேசன். இவர் அதிமுக கிழக்கு ஒன்றிய துணை செயலாளராக உள்ளார். மேலும் இவர் மதுரை பிஆர்பி கிரானைட்ஸ் உரிமையாளர் பழனிச்சாமியின் உடன் பிறந்த மூத்த சகோதரியின் மகன். இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அமரேசனின் வீடு, தக்காளி கமிஷன் கடை மற்றும் அலுவலகங்களில் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வருமானவரித் துறை மதுரை மண்டல துணை இயக்குனர் பூவலிங்கம் தலைமையில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று மாலை 6 மணியளவில் சோதனை நடத்தினர். வீட்டில் அமரேசன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மட்டும் இருந்துள்ளனர்.

வீட்டினுள் புகுந்த அதிகாரிகள் அமரேசன் மற்றும் அவரது மனைவியின் செல்போன்களை வாங்கி, ஒரு மேஜையில் வைத்து பூட்டினர். தொடர்ந்து வீடு முழுவதும் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். இதில் வீட்டின் ஒரு அறையில் கட்டுக்கட்டாக ரூ.2.17 கோடி ரொக்கப்பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த வருமான வரித்துறை  அதிகாரிகள் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என கேட்டு அமரேசனிடம் கிடிக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதற்கு அவர் முறையாக பதிலளிக்கவில்லை. இதில் ரூ.70 லட்சம் வரை கணக்கு காட்டியதாக தெரிகிறது. மீதமுள்ள பணத்துக்கு அவரால் முறையாக கணக்கு காட்ட முடியவில்லை. மேலும் வீட்டில் சோதனையை தொடர்ந்தனர். நள்ளிரவு 12 மணி வரை இந்த சோதனை நடந்தது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.17 கோடி பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆண்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் லோகிராஜன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தொகுதியில் வாக்காளர்களுக்கு கடைசி நேர பணப்பட்டுவாடாவை அதிமுகவினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் அனைவரது வீடுகளிலும் சோதனை நடத்தினால், மேலும் கோடிக்கணக்கில் பணம் சிக்கும் என்று கூறப்படுகிறது. அமரேசன், கிழக்கு ஒன்றியப் பகுதிகளில் பெண்கள் மூலம் வீடு வீடாக சென்று, வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஒருமுறை வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தோல்வி பயத்தால் தற்போது, 2வது முறையாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வைத்திருந்த பணம்தான், தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

முன்னதாக நேற்று பகலில் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் என்பவரின் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. ஆண்டிபட்டி அருகே ராஜக்காள்பட்டி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் நடந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று ரூ.2.17 கோடி சிக்கிய நிலையில் அதிமுக நகர, ஒன்றிய, கிளை செயலாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஓபிஎஸ்சுக்கும் நெருக்கமானவர்

ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வரும் அமரேசன் தேனி மாவட்ட அதிமுகவில் செல்வாக்கு மிக்கவராக வலம் வருகிறார்.  தேர்தல்களுக்கு தேவையான பணம், அமரேசன் மூலம் தான் மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. தேனி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து விட்டதாக தெரிகிறது. மீதமுள்ள பகுதிகளுக்கு இன்றிரவு கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது

தோட்டங்களிலும் பதுக்கல்

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய அதிமுக நிர்வாகிகள் ரெய்டுக்கு பயந்து தோட்டங்களில் உர மூடைகளில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏப்.3 அல்லது ஏப்.4ம் தேதி அதிகாலை தென் மாவட்டங்களில் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எனவே தோட்டங்களிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: